

தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு குறித்து குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 'வள்ளியின் நீலகிரி மலைப்பயணம்' என்ற காமிக்ஸ் புத்தகத்தை உலக இயற்கை நிதியம் உருவாக்கியுள்ளது. அதனை செஸ் வீரர் விஸ்வநாத் ஆனந்த், கல்வியாளர் மதுரா விஸ்வேஸ்வரன் ஆகியோர் வெளியிட்டனர்.
உலக இயற்கை நிதியம் (WWF - India) சார்பில், 'வள்ளியின் நீலகிரி பயணம்' என்ற குழந்தைகளுக்கான நீலகிரி வரையாடு பற்றிய புத்தக வெளியீட்டு விழா இணைய வழியில் இன்று மதியம் நடைபெற்றது. வண்ண வண்ண ஓவியங்களும், சுவாரசியமான கதைநடையும் கொண்ட இந்த நூலின் தமிழ் மற்றும் ஆங்கிலப் பிரதிகளை செஸ் கிராண்ட் மாஸ்டரும், உலக இயற்கை கல்வி தூதருமான விஸ்வநாதன் ஆனந்த், கல்வியாளர் மதுரா விஸ்வேஸ்வரன் ஆகியோர் வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய விஸ்வநாத் ஆனந்த், "வருங்கால தலைமுறையான குழந்தைகளை இயற்கையை நோக்கி அழைத்துச் செல்வதே இயற்கையைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி என்று நம்புகிறேன். அந்த வகையில் இந்தப் புத்தகம் குழந்தைகளை இயற்கையின் பால் ஈர்த்து, அவர்களை இயற்கை ஆர்வலர்களாக மாற்றும். வள்ளி என்ற மாணவி தன் வகுப்புத் தோழர்களுடன், கல்விச் சுற்றுலாவாக நீலகிரி மலைத்தொடருக்குச் செல்கிறாள்.
அங்கே இயற்கைக் காட்சியையும், விலங்குகளையும் பார்க்கிற அவள், அரிய விலங்கினமான வரையாட்டையும் பார்க்கிறாள். ஓங்கி உயர்ந்த செங்குத்தான பாறைகளின் முகடுகளில் அனாசயமாக துள்ளி ஓடி, புற்களை மேய்கிற வரையாடுகளைப் பற்றி அவர்கள் பேசிக்கொள்வதும், அறிந்துகொள்வதும்தான் புத்தகத்தின் மையம். அந்த மாணவர்களுக்கு இந்தப் பயணத்தின் மூலம் இயற்கையின் பால் ஏற்படுகிற புரிதல், காமிக்ஸ் வாசிக்கிற குழந்தைகளுக்கும் ஏற்படும்" என்றார்.
"பள்ளிக்கூடமும், புத்தகங்களும் ஒரு குழந்தையை நல்ல மனிதனாக உருவெடுக்கச் செய்யும் என்ற நம்பிக்கை ஒரு கல்வியாளனாக எனக்கு உண்டு. வரையாடு என்ற அரிய விலங்கு பற்றிய இப்படியொரு புத்தகத்தை காமிக்ஸ் வடிவில் எழுதி வெளியிட்டிருக்கும் உலக இயற்கை நிதியத்தையும், எழுத்தாளர்கள் ஆர்த்தி முத்தண்ணா சிங், மம்தா நைனி ஆகியோரையும் பாராட்டுகிறேன்" என்றார் கல்வியாளர் மதுரா விஸ்வேஸ்வரன்.
நிகழ்ச்சியில் பேசிய முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் கூறுகையில், "இந்தியாவில் காணப்படும் 12 வகை மலைவாழ் வரையாடு இனங்களில், நீலகிரி வரையாடு மட்டுமே தென்னிந்தியாவில் காணப்படும் அரிய இனம். வரையாட்டைப் பாதுகாப்பது அவற்றின் வாழிடமான சோலை புல்வெளி காடுகளைப் பாதுகாப்பதற்குச் சமமானது. இந்த நோக்கத்தில்தான் தமிழ்நாடு அரசு, நீலகிரி மலையில் முகூர்த்தி தேசியப் பூங்காவை உருவாக்கியுள்ளது" என்றார்.
இந்தியாவில் 1969 முதல் 50 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் உலக இயற்கை நிதியமானது, 2008ம் ஆண்டு முதல் வரையாறு பாதுகாப்பிற்கான முன்னெடுப்புகளையும் செய்து வருகிறது. தமிழ்நாடு மற்றும் கேரள மலைப்பகுதிகளில் வரையாடுகளின் நிலை, எண்ணிக்கை, வாழிடம், பரப்பு மற்றும் அவற்றின் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து கடந்த 2015ல் ஒருங்கிணைந்த அறிக்கை ஒன்றையும் வெளியிட்டோம் என்று உலக இயற்கை நிதியத்தின் தலைமை செயல்பாட்டு அலுவலர் கரண் பல்லா கூறினார். நிகழ்ச்சியை அ.ஸ்ரீகுமார் ஒருங்கிணைத்தார்.