Published : 24 Aug 2021 07:02 PM
Last Updated : 24 Aug 2021 07:02 PM

கே.டி.ராகவன் விவகாரத்தில் விசாரணைக் குழு; மதனுக்கு உள்நோக்கம்: அண்ணாமலை 

சென்னை

பாஜகவைச் சேர்ந்த கே.டி.ராகவனின் சர்ச்சை வீடியோ வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து விசாரணைக் குழு அமைத்து வீடியோ பதிவுகளில்‌ உள்ள உண்மையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"இன்று காலை சமூக ஊடகத்தில் வெளியான கே.டி.ராகவனின் வீடியோ குறித்த செய்திகளை அறிந்தேன். இந்த விவகாரத்தை வெளியிட்ட யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் என்னைச் சந்தித்துப் பேசியது உண்மை. முதல் முறையாகக் கட்சி அலுவலகத்தில் அவர் என்னைச் சந்தித்துப் பேசியபோது, கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் பற்றிய வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் உடனடியாக அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஒருவர்‌ மீது சுமத்தப்படும்‌ குற்றங்களால்‌ மட்டும்‌ அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டுவிடக் கூடாது. அதன்‌ உண்மைத் தன்மையை ஆராய வேண்டும்‌. குற்றச்சாட்டில் உண்மை இருக்கும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தேன்.

ஆகவே, அந்த வீடியோ பதிவுகளை எங்களிடம் காட்சிப்படுத்தினால் அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினேன். ஆனால், அவர் பதிவுகளை என்னிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டார்.

அடுத்த நாள் மறுபடியும் என்னை அலுவலகத்தில் சந்தித்த மதன் ரவிச்சந்திரன், வலுவான வீடியோ பதிவுகள்‌ உள்ளன. அவர்கள் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கூறினார்.

ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ பதிவை மட்டும் நம்பி, அதன் உண்மைத் தன்மையை அறியாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் அதன் மேல் விசாரணை செய்யாமல் குற்றம் சாட்டும் நபரின் வாய் வார்த்தையை மட்டும் நம்பி எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? ஆகவே, மதன்‌ ரவிச்சந்திரன்‌ இரண்டாம்‌ முறை வலியுறுத்தியபோதும்‌ ஆதாரமாக அவர்‌ சுட்டும்‌ பதிவுகளைச் சமர்ப்பிக்கக் கூறினேன்‌.

அதன்பின், மூன்றாவது முறையாக அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி நான் ஏற்கெனவே கேட்டுக்கொண்டபடி உடனடியாக நியாயம் கிடைக்குமா, நடவடிக்கை எடுக்கப்படுமா எனக் கேட்டிருந்தார். கட்சி ரீதியான நடவடிக்கை என்ற முடிவையும் காலம் தாழ்த்தாமல் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், தான் வீடியோ பதிவுகளை வெளியிடப்போவதாக குறுஞ்செய்தியில் கூறியிருந்தார். குற்றச்சாட்டு என்ன என்பதை அறியாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற என் முடிவில் நான் உறுதியாக இருந்தேன். ஆகவே என் பதிலில், "செய்துகொள்ளுங்கள்" என்று சுருக்கமாக முடித்துவிட்டேன்.

இன்று காலை கே.டி.ராகவனிடம் பேசினேன். 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக உண்மையாகவும் நேர்மையாகவும் கட்சிப் பணியாற்றிய தன் மீது களங்கம் கற்பிக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் கட்சியின் நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் எண்ணத்துடன், உயர் தொழில்நுட்பத்தில் தன் மீது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்றும், இதைத் தான் சட்ட ரீதியாக எதிர்கொள்ளப் போவதாகவும் கே.டி.ராகவன் தெரிவித்தார். மேலும் கட்சியின் மாண்பையும் செம்மையையும் கருதி கட்சிப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

நானும் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டேன். கே.டி.ராகவன் இந்தப் பிரச்சினையை முறைப்படி சட்ட ரீதியாக எதிர்கொண்டு நிரூபிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

மதனுக்கு உள்நோக்கம்

அதேபோல, மதன் ரவிச்சந்திரன் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில் இதுபோல இன்னும் வேறு நபர்களின் பதிவுகளும் வெளிவரவிருக்கிறது என்று சொல்லியிருப்பது அவருக்கு ஏதேனும் உள்நோக்கம் இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல.

பாரம்பரியத்தையும் மரபையும் கட்டிக்காக்கும் பாஜகவின் பொறுப்பிலும் நிர்வாகத்திலும் உள்ள பெண்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறார்கள். மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள்.

விசாரணைக்‌ குழு

இந்நிலையில்‌ கட்சியின்‌ மாண்பு ௧ருதி இதுபோலக் குற்றம்‌ சுமத்தப்பட்ட உறுப்பினர்கள்‌ மற்றும்‌ நிர்வாகிகள்‌ மீது விசாரணை நடத்த பாஜக மாநிலச்‌ செயலாளர்‌ மலர்கொடி தலைமையில்‌ ஒரு விசாரணைக்‌ குழு அமைத்து, சாட்டப்படும்‌ குற்றங்களில்‌, வீடியோ பதிவுகளில்‌ உள்ள உண்மையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்‌.

மேலும்‌, இந்த வீடியோ பதிவின்‌ இறுதியில்‌ தனக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால்‌ அதற்கு ஒரு சில நபர்கள்‌தான்‌ காரணம்‌ என்றும்‌ மதன்‌ கூறியிருக்கிறார்‌. நான்‌ தொடர்ந்து மூன்று முறை வலியுறுத்‌தியும்‌ கட்சியின்‌ தலைவருக்கும்‌, அமைப்புச் செயலாளருக்கும்‌ ஆதாரங்களைக் காட்சிப்‌படுத்தாமல்‌ தன்‌ சொல்லை மட்டும்‌ நம்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று வலியுறுத்திய மதனுக்கு ஏற்படும்‌ பாதிப்புகளுக்கு பாஜக எப்படிப் பொறுப்பேற்க முடியும்‌? அவரவர்‌ செயலுக்கும்‌ அவரவர்‌ நடவடிக்கைக்கும்‌ அவரவர்‌தான்‌ பொறுப்பேற்க வேண்டும்’’‌.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x