மாநில மாநாட்டை தடுக்க ஆளும்கட்சி சதி செய்கிறது: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

மாநில மாநாட்டை தடுக்க ஆளும்கட்சி சதி செய்கிறது: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
Updated on
1 min read

பாமக-வின் மாநில மாநாட்டை தடுக்க ஆளும்கட்சி சதி செய்வதாக அன்புமணி ராமதாஸ் நேற்று தருமபுரியில் குற்றம் சாட்டினார்.

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது:

வரும் 14-ம் தேதி சென்னை அடுத்த வண்டலூர் பகுதியில் பாமக-வின் மாநில மாநாடு நடத்த 6 மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. நீதிமன்றத்துக்கு சென்று அனுமதி பெற்று மாநாட்டு பணிகளை மேற்கொண்டு வந்தோம். 60 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று (நேற்று) விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் வரும் 12-ம் தேதி வரை மாநாட்டு ஏற்பாடு பணிகள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூட்டம், மாநாடு போன்றவற்றை நடத்துவது, கட்சியின் கொள்கைகளை மக்களிடம் சேர்ப்பது உள்ளிட்டவை தான் ஓர் அரசியல் கட்சியின் ஜனநாயகக் கடமை. இதை செய்ய விடாமல் தமிழக அரசு தடுக்கிறது.

இதுவரை நடத்திய மண்டல மாநாடுகளில் பாமக-வுக்கு திரண்ட ஆதரவைக் கண்டு மிரண்டு ஆளும்கட்சி இதுபோன்ற சதி வேலைகளை செய்து வருகிறது. களத்தில் நேரடியாக நின்று மோத முடியாமல் இதுபோன்ற முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தின் 90 சதவீதம் இளையோர், பெண்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் என பல தரப்பிலும் பாமக-வுக்கு அதிகரித்துக் கொண்டே செல்லும் ஆதரவு தமிழக அரசுக்கு ஆத்திரம் தந்துள்ளது. ஆளும்கட்சியின் தடைகளை தகர்த்து மாநாடு நடத்துவோம். நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம்.

இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாநில துணைப் பொதுச் செயலாளர் சரவணன், மாநில நிர்வாகிகள் அரசாங்கம், சாந்தமூர்த்தி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in