

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் தேசிய நினைவிடம் 525 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) பார்வையிட்டனர்.
நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு, கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொது முடக்கத்தை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மத்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பொறுப்பில் இருந்த ராமேசுவரத்திலுள்ள குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் தேசிய நினைவிடம் 17.03.2020 முதல் மூடப்பட்டது.
அவ்வப்போது கரோனா பரவல் தளர்வுகளின்போது ராமேசுவரத்தில் ராமநாத சுவாமி கோயில், அக்னி தீர்த்தக் கடற்கரை மற்றும் தனுஷ்கோடி அரிச்சல்முனை ஆகியவற்றுக்குப் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், கலாம் நினைவிடத்துக்கு மட்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் தொடர்ந்து தடை நீடித்து வந்தது. இதனால் ராமேசுவரம் வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்த முடியாமலும் வாசலில் நின்றபடி தேசிய நினைவிடத்தை மட்டும் பார்த்துவிட்டு மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்திருப்பதால் ராமேசுவரத்தில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தைப் பார்வையிட மத்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இன்று முதல் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து ராமேசுவரத்திற்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நினைவிடத்தைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
முன்னதாக, கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதின், மகள் நசிமா மரைக்காயர், பேரன்கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம் மற்றும் குடும்பத்தினர் இஸ்லாமிய முறைப்படி சிறப்புப் பிரார்த்தனை செய்தனர். பின்னர் இனிப்புகளையும், மரக்கன்றுகளையும் நினைவிடத்தைப் பார்வையிட வந்தவர்களுக்கு வழங்கினர்.