

தமிழகத்தில் 5,780 கி.மீ. நீளத்துக்கு ஊரகச் சாலைகளை மேம்படுத்துதல், வலுப்படுத்துதல் மற்றும் 121 பாலங்கள் கட்டுதல் ஆகிய பணிகள் ரூ.2,097 கோடியில் மேற்கொள்ளப்படும். ஊராட்சி மன்றத் தலைவர்களின் மதிப்பூதியம் உயர்த்தப்படும் என்று பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று ஊரக வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழகத்தில் 5,780 கி.மீ. ஊரகச் சாலைகளை மேம்படுத்துதல், வலுப்படுத்துதல் மற்றும் 121 பாலங்கள் கட்டுதல் ஆகிய பணிகள் ரூ.2,097 கோடியில் மேற்கொள்ளப்படும். ஊரகப் பகுதிகளில் நிலத்தடி நீரை அதிகரிக்க 68 லட்சம் மரக்கன்றுகள் நடுதல், 10 ஆயிரம் தடுப்பணைகள் கட்டுதல், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தூய்மைப்படுத்தி நிலத்தடியில் செலுத்துவதற்காக 25,500 சமுதாய உறிஞ்சு குழிகள், 1 லட்சத்து 75 ஆயிரம் தனிநபர் உறிஞ்சு குழிகள் அமைத்தல் போன்ற பணிகள் ரூ.948.50 கோடியில் மேற்கொள்ளப்படும்.
நீர்ப்பாசன தேவையை நிறைவேற்றுவதற்காக 500 சமுதாய கிணறுகளும், 1,500 தனி நபர் கிணறுகளும் ரூ.200.50 கோடியில் தூர்வாரப்படும். மொத்தமாக 1,149 கோடியில் நிலத்தடி நீரை அதிகரிக்கும் பணிகளும், நீர்ப்பாசன பணிகளும் 2021-22 ஆண்டில் மேற்கொள்ளப்படும்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீ்ழ் 12,525 நூலகங்கள் படிப்படியாக புதுப்பிக்கப்படும். ஊரகப் பகுதிகளில் ரூ.916.75 கோடியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும்.
தனிநபர் பயன்பெறும் வகையில் ரூ.27.68 கோடியில் 400 பட்டுப்புழு வளர்ப்புக் கூடங்கள், ரூ.9 கோடியில் 400 காளான் வளர்ப்புக் கூடங்கள், ரூ.48 கோடியில் 500 சுய உதவிக் குழுவினருக்கான பணிக்கூடங்கள் அமைக்கப்படும்.
ஊரகப் பகுதிகளில் 12 ஆயிரம் புதிய மகளிர் சுய உதவிக்குழுக்களும், நகர்ப்புறப் பகுதிகளில் 20 ஆயிரம் புதிய மகளிர் சுயஉதவிக் குழுக்களும் அமைக்கப்படும். இக்குழுக்களுக்கு ஆதார நிதியாக ஊரக மகளிர் குழுவுக்கு ரூ.15 ஆயிரம், நகர்ப்புற மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.38 கோடி சுழல்நிதி வழங்கப்படும்.
சுயஉதவிக் குழு பெண்களுக்கு ரூ.2 கோடியில் திறன்மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 25 ஆயிரம் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு அமையவும், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் தேவையான திறன் பயிற்சி அளிக்க ரூ.87 கோடியே 80 லட்சம் வழங்கப்படும். சிறப்பாக செயல்படும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு ‘மணிமேகலை விருதுகள்’ வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்