பழங்குடிகளுக்குக் குடும்ப அட்டை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பழங்குடிகளுக்குக் குடும்ப அட்டை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

குடும்ப அட்டை இல்லாத பழங்குடியினக் குடும்பங்களுக்குக் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் பண்ணைக்காட்டைச் சேர்ந்த மல்லிகா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''தமிழகத்தில் மொத்த மக்கள்தொகையில் 1.5 சதவீதம் பேர் பழங்குடியினர். கரோனா தொற்றுக் காலத்தில் பழங்குடியின மக்கள் வாழ்வாதாரம் இழந்து பரிதாபமான நிலையில் உள்ளனர். குடும்ப அட்டை இல்லாததால் அரசின் கரோனா நிவாரண நிதி மற்றும் மளிகைப் பொருள் தொகுப்பு பழங்குடியினக் குடும்பங்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே, தமிழகத்தில் பழங்குடியினர் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களுக்குக் குடும்ப அட்டை வழங்க உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவைத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, எம்.துரைசாமி அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார்.

பின்னர், ''மனுதாரர் கோரிக்கை தொடர்பாக 15 நாளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் புதிதாக மனு அளிக்க வேண்டும். பின்னர் அந்த மனு அடிப்படையில் முறையாக ஆய்வு செய்து குடும்ப அட்டை இல்லாத பழங்குடியினக் குடும்பங்களுக்குக் குடும்ப அட்டை வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in