Published : 24 Aug 2021 04:28 PM
Last Updated : 24 Aug 2021 04:28 PM

மத்திய அரசு நிதி; திமுக அரசின் நிர்வாகத் திறமை இன்மையால் கை நழுவுகிறதா? - ஈபிஎஸ் கேள்வி

ஈபிஎஸ்: கோப்புப்படம்

சென்னை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு வரவேண்டிய மத்திய அரசு நிதி, திமுக அரசின் நிர்வாகத் திறமை இன்மையால் கை நழுவுகிறதா என, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, ஈபிஎஸ் இன்று (ஆக. 24) வெளியிட்ட அறிக்கை:

" ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்ற முதுமொழியை நிதர்சனப்படுத்தும் பணியைப் பல ஆண்டுகளாகச் செய்துவந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தற்போதைய சந்தர்ப்பவாத திமுக ஆட்சியில் செயலிழந்துபோய் நிற்பது வேதனைக்குரியதாக உள்ளது.

தற்போதைய நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாகத் திறமை இன்மையால், மத்திய அரசு தமிழகத்துக்குத் தர வேண்டிய 2,000 கோடி ரூபாயைப் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

மத்திய அரசிடம் இருந்து நமக்கு வரவேண்டிய நெல் அரவை மானிய நிலுவைத் தொகையைப் பெற, நுகர்பொருள் வாணிபக் கழகம் துரிதமாகச் செயல்படாமல், தாமதம் செய்வதால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம், மத்திய அரசுக்காக விவசாயிகளிடம் இருந்து நெல்லைக் கொள்முதல் செய்கிறது. இதுபோல், விவசாயிகளிடமிருந்து வாங்கப்படும் நெல், வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான மற்றும் தனியாருக்குச் சொந்தமான அரவை ஆலைகளில் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.

இதற்காக மத்திய அரசு சி.எம்.ஆர். எனப்படும் நெல் அரவை மானியத் தொகையை தமிழகத்துக்கு ஆண்டாண்டு காலமாக வழங்குகிறது. இதுவரை அதிமுக அரசு, முறையாக மத்திய அரசிடம் தகவல்களைத் தெரிவித்து மானியத்தைப் பெற்று அதன் பலனை விவசாயிகளுக்கு அளித்து வந்தது.

அதிர்ஷ்டவசத்தால் ஆட்சிக்கு வந்த திமுக அரசின் அலட்சியப் போக்கால், 2,000 கோடி ரூபாய் வரை மத்திய அரசிடம் மானிய நிலுவைத் தொகை தேங்கியுள்ளது. மத்திய அரசின் மானியத்தைப் பெறுவதற்கான ஆவணங்களைத் தயாரித்து, குறித்த காலத்தில் திமுக அரசு அனுப்பவில்லை என்று சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டம் அதிமுக ஆட்சிக் காலம் முதல் அமலில் உள்ளது. நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையும் அவ்வப்போது உயர்த்தப்படுகிறது. தற்போதும் அதுபோல் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் சீசனில் நெல் கொள்முதலை அதிகரிக்க இந்த அரசு முயல வேண்டும்.

ஆனால், அதற்குத் தேவையான சாக்குப் பைகள், சணல், தார்பாலின் உள்ளிட்ட உபகரணங்களைத் தயார் நிலையில் வைக்க இதுவரை எந்தவித நடவடிக்கையையும் நுகர்பொருள் வாணிபக் கழகம் எடுக்கவில்லை.

இதுபோன்ற விவகாரங்களில், வாணிபக் கழகத்தின் தாமதமான செயல்பாடுகளால் நெல் கொள்முதலில் பாதிப்பு ஏற்படுமோ என்று நம் விவசாயிகள் அஞ்சுகிறார்கள். இப்பொழுதே டெல்டா மாவட்டங்களில் விற்பனைக்காக நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டுவரப்பட்ட நெல், மழையினால் நனைந்து பயிராக மாறுகின்ற காட்சியினை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் தினமும் செய்திகளாக வெளியிட்டு வருகின்றன. அப்படி இருந்தும், நெல் கொள்முதலுக்கான நிலையங்கள் நெல்வரத்துக்கு ஏற்றவாறு அதிகரிக்கப்படவில்லை என்பதே உண்மை.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், முன்னுரிமை, அந்த்யோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்குவது குறித்த விவரங்கள், மத்திய உணவுத் துறையின் 'அன்ன விர்டான்' என்ற இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

ஆனால், மத்திய அரசின் இந்த இணையதளத்துக்கு, தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் அரிசி, கோதுமை தொடர்பாக சரியான விவரங்களை தற்போதைய திமுக அரசின் கீழ் செயல்படும் வாணிபக் கழகம் வழங்காமல் இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

மத்திய அரசு பலமுறை வலியுறுத்தியும், இந்தக் குறைகள் நிவர்த்தி செய்யப்படாததால், நிதி விடுவிக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தைத் தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்பி, துரித கதியில் செயல்படத் தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என்று திமுக அரசை கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x