Published : 24 Aug 2021 02:16 PM
Last Updated : 24 Aug 2021 02:16 PM

செம்பரம்பாக்கம் ஏரி உடைப்பு; உண்மையை மூடிமறைக்கும் அதிமுக: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

செம்பரம்பாக்கம் ஏரி உடைப்பு குறித்து அதிமுக உண்மையை மூடி மறைக்கிற வகையில் கருத்துகள் கூறுவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஆக. 24) வெளியிட்ட அறிக்கை:

"அதிமுக ஆட்சியில் 2015ஆம் ஆண்டில் சென்னையில் கனமழை பெய்தபோது, செம்பரம்பாக்கம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதா? அல்லது உபரிநீர் வெளியேற்றப்பட்டதா? என சட்டப்பேரவையில் கடுமையான விவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் உண்மையை மூடிமறைக்க முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால், உண்மைகளை எவராலும் மூடிமறைக்க முடியாது.

இந்தப் பின்னணியில், 2015 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு யார் பொறுப்பு என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டிய நோக்கத்தில் நடந்தவற்றைக் கூறினால்தான் உண்மைகள் வெளிவரும்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ல் தொடங்கி, டிசம்பர் 31 வரை பெய்யும் என்பதை அனைவரும் அறிவார்கள். நவம்பர் 1-ல் தொடங்கி, டிசம்பர் 2ஆம் தேதி வரை 32 நாட்களில் 1,333 மில்லி மீட்டர் அப்போது மழை பெய்துள்ளதாகப் பதிவாகியுள்ளது. இதில், நவம்பர் 1 முதல் 23 வரை 1,131 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மீதி 374 மில்லி மீட்டர்தான் நவம்பர் 23 முதல் டிசம்பர் 2 வரை பெய்துள்ளது. இதில், நவம்பர் 24 முதல் 29 வரை ஒரு சொட்டு மழை கூட சென்னை மாநகரில் பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்காலங்களில் வெள்ளப் பெருக்கைத் தடுக்க அன்றைய ஆட்சியாளர்கள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

தமிழக அரசிடம் நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் நவம்பர் 17ஆம் தேதி 18,000 கன அடி நீரும், டிசம்பர் 2ஆம் தேதி 29,000 கன அடி நீரும் திடீரென முன்னறிவிப்பு இல்லாமல் இரவு நேரங்களில் திறந்துவிடப்பட்ட காரணத்தால், ஆற்றங்கரையில் வாழ்ந்து வந்த 600-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதற்கும், உடைமைகளை இழப்பதற்கும் அன்றைய முதல்வர் ஜெயலலிதாதான் பொறுப்பு என்று அன்றைக்கு குற்றச்சாட்டு கூறப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து டிசம்பர் 2-ம் தேதி 29,000 கன அடி நீரை திடீரென திறப்பதற்கு முதல் நாள் டிசம்பர் 1-ம் தேதி, விநாடிக்கு 900 கன அடி தண்ணீரை மட்டுமே குறைவாகத் திறந்தது ஏன்? இப்படி திடீரென அதிக அளவில் மறுநாள் தண்ணீரைத் திறந்ததால் மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவார்கள் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் அன்றைய ஆட்சியாளர்கள் செயல்பட்டார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

இத்தகைய அசாதாரண சூழலில் செயல்படக் கட்டுப்பாட்டு அறையைக் கூட அமைக்காமல் பொறுப்பற்ற முறையில் நிர்வாகக் கோளாறு காரணமாக வெள்ளத்தினால் நூற்றுக்கணக்கான உயிரிழப்பு ஏற்பட்டதற்கு அன்றைய அதிமுக ஆட்சிதான் பொறுப்பாகும்.

மக்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து எந்த நேரத்தில் எவ்வளவு உபரி நீரைத் திறக்க வேண்டும் என்பது, அணையைத் தொடர்ந்து கண்காணித்து வரும் பொறியாளர்களுக்கும், அங்குள்ள களப் பணியாளர்களுக்கும் மட்டும்தான் தெரிந்திருக்க முடியும்.

ஆனால், தமிழகத்தில் எந்த அணையையும் திறப்பதும், மூடுவதும் முதல்வர் ஆணையின் அடிப்படையில் அதிகாரக் குவியல் காரணமாக நடக்கிறபோது, செம்பரம்பாக்கம் ஏரியைத் திறப்பதற்குக் கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

பொதுப்பணித்துறைப் பொறியாளர்கள், செயலாளரிடம் கோரிக்கை விடுக்க, அவர் தலைமைச் செயலாளருக்குச் சொல்ல, அவர் முதல்வரோடு தொடர்புகொள்ள முடியாமல் திண்டாடிய காரணத்தினால் தான் திறக்க வேண்டிய நேரத்தில் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளைத் திறக்காமல் காலம் தாழ்த்தி, ஒரே நேரத்தில் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்றைய அதிமுக அரசின் பொறுப்பற்ற மெத்தனப் போக்கு காரணமாகத்தான் சென்னை மாநகரில் அத்தகைய மனிதப் பேரவலம் நிகழ்ந்ததை எவராவது மறுக்க முடியுமா?

செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளிலிருந்து முன்னறிவிப்பு இல்லாமல் நீர் திறக்கப்படுகிற அதே நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான சிறிய, பெரிய ஏரிகளிலிருந்து உபரிநீர் வெளியேறி வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதை முன்கூட்டியே அறிய முயலாத நிலையில்தான் அன்றைய முதல்வர் செயல்பட்டார் என்பதை எவரும் மறுக்க முடியாது.

இத்தகைய வெள்ளப் பெருக்கு காரணமாக, இதன் மூலம் வந்த 67,000 கன அடி நீரோடு, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்பட்ட 29,000 கன அடி நீரும் சேர்ந்து இறுதியாக ஒரு லட்சம் கன அடி நீர் அடையாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து அப்பாவி மக்கள் அடித்துச் செல்வதற்கு அன்றைய முதல்வர் மற்றும் பொதுப் பணித்துறையினரின் அலட்சியப் போக்குதான் காரணமாகும்.

அடையாறு, கூவம் ஆகிய ஆறுகள் அதிமுக ஆட்சியில் தூர்வாரப்படாத காரணத்தால் வெள்ளப் பெருக்கைக் கடல் முகத்துவாரங்களில் உள்வாங்கி, அனுப்ப முடியாமல் திரும்பவும் வெள்ள நீர், குடியிருப்புகளைத் தாக்குகிற அவலநிலை ஏற்பட்டது. செய்ய வேண்டியதை, செய்ய வேண்டிய நேரத்தில் அதிமுக ஆட்சியினர் செய்யாதததால், இத்தகைய விலையை மக்கள் கொடுக்க வேண்டியிருந்தது.

ஆனால், சில ஆண்டுகள் கழித்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைக்கப்பட்ட மாநில பேரிடர் ஆணையம், 2015 டிசம்பர் 2ஆம் தேதிக்கு முன்பு ஒருமுறை கூடக் கூடி விவாதிக்கவில்லை. பேரிடர் ஏற்படுவதற்கு முன்பு அதைத் தடுக்கிற வகையில்தான் ஓர் அரசு செயல்பட வேண்டுமே தவிர, பேரிடர் நிகழ்ந்த பிறகு நிவாரண உதவி செய்வது என்பது உண்மையான பேரிடர் மேலாண்மையாக இருக்க முடியாது.

எனவே, கடந்த 2015 டிசம்பரில் இயற்கையின் சீற்றத்தினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்தாலும், அன்றைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியாளர்கள் மிகுந்த பொறுப்புணர்ச்சியோடும், தொலைநோக்குப் பார்வையோடும் செயல்பட்டிருந்தால் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளையும், மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஏற்பட்ட பேரழிவுகளையும் நிச்சயம் தடுத்திருக்க முடியும்.

ஆனால், இத்தகைய பேரிழப்புக்குக் காரணமான அதிமுக உண்மையை மூடி மறைக்கிற வகையில் கருத்துகள் கூறுவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் இத்தகைய பேரழிவு ஏற்படுவதற்கு அதிமுக ஆட்சிதான் பொறுப்பாகும் என்பதை வலியுறுத்தி, உறுதிப்படுத்தி நினைவுபடுத்த வேண்டிய காரணத்தினால் இதை மீண்டும் தெளிவுபடுத்துகிறோம்.

இனி, வருங்காலங்களில் இத்தகைய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க 2015 வெள்ளப்பெருக்கை ஒரு படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கைகளைத் தமிழக முதல்வர் தலைமையிலான அரசு நிச்சயம் மேற்கொள்ளும் என்று உறுதியாக நம்புகிறோம்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x