சென்னையில் நில அதிர்வு; மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்: தமிழ்நாடு வெதர்மேன்

நிலநடுக்க உருவாக்க மையம் வட்டமிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்க உருவாக்க மையம் வட்டமிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

நிலநடுக்க அதிர்வுகள் காக்கி நாடா, சென்னை, குண்டூர், திருப்பதி ஆகிய இடங்களில் உணரப்பட்டன. மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இன்று (ஆக. 24) நண்பகல் சுமார் 12.35 மணியளவில் சென்னையின் அடையாறு, பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, அண்ணா நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், ஆலந்தூர், மயிலாப்பூர், மாதவரம், கொளத்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த பலரும், சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

சென்னை - ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக் கடலில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், இந்த நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளதாகவும், சென்னையில் இருந்து கிழக்கு - வடகிழக்கு திசையில் சுமார் 320 கி.மீ. தொலைவில் வங்கக் கடலில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாகவும், தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில், ''வங்காள விரிகுடா கடலை மையமாகக் கொண்டு இன்று நண்பகல் சுமார் 12.35 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளது. இதன் ஆழம் 10 கிலோ மீட்டர். சென்னையிலிருந்து சுமார் 320 கிலோ மீட்டரில் இந்த நில நடுக்கம் உருவாகியுள்ளது.

இதனால் ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வுகள் காக்கி நாடா, சென்னை, குண்டூர், திருப்பதி ஆகிய இடங்களில் உணரப்பட்டன. மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். சுனாமி குறித்த அச்சம் தேவையில்லை. 2019ஆம் ஆண்டிலும் இதே மாதிரியான லேசான நில அதிர்வு ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in