தருமபுரி அருகே ரயில் பாதை ஓரத்தில் கிடந்த பொம்மை ரூபாய் நோட்டுகளால் பரபரப்பு

தருமபுரி அருகே ரயில் பாதை ஓரத்தில் கிடந்த பொம்மை ரூபாய் நோட்டுகளால் பரபரப்பு
Updated on
2 min read

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே ரயில் பாதை ஓரத்தில், பொம்மை ரூபாய் நோட்டுகள் இறைந்து கிடந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் -பெங்களூரு ரயில் பாதையில் சேலம் மாவட்டம் காருவள்ளி ரயில் நிலையத்திற்கும் தருமபுரி மாவட்டம் தொப்பூர் ரயில் நிலையத்துக்கும் இடையே குண்டுக்கல் என்ற பகுதி அருகே ரயில் பாதை ஓரம் ரூ.2000 மற்றும் ரூ.500 மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இறைந்து கிடந்தன. ரயில்வே பாதை கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் அப்பகுதிக்கான 'கீ மேன்' இன்று காலை அப்பகுதி வழியாகச் சென்றபோது இந்த ரூபாய் நோட்டுகளைப் பார்த்துள்ளார்.

உடனே இதுகுறித்து அவர் தொப்பூர் ரயில் நிலையத்துக்குத் தகவல் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து ரயில்வே அலுவலர்கள் அளித்த தகவலின் பேரில் தீவட்டிப்பட்டி போலீஸார், தருமபுரி ரயில் நிலைய போலீஸார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்றனர். அவர்களின் ஆய்வில், அந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் குழந்தைகள் விளையாடப் பயன்படுத்தும் பொம்மை ரூபாய் நோட்டுகள் எனத் தெரியவந்தது. சில லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த நோட்டுகளை ரயில் நிலையக் காவல் நிலைய போலீஸார் மீட்டனர்.

அவ்வழியே சென்ற ரயிலில் பயணித்தவர்களின் குழந்தைகள் இந்த நோட்டுகளைத் தவறவிட்டனரா அல்லது சினிமா, தொலைக்காட்சி படப்பிடிப்பில் பயன்படுத்த எடுத்துச் சென்றபோது ரயிலில் இருந்து இந்த நோட்டுகள் தவறி விழுந்தனவா அல்லது பொம்மை ரூபாய் என்பதை அறியாமல் ரயில் பயணியிடம் இருந்து யாரேனும் திருட முயன்றபோது கை நழுவி விழுந்து ரயில் பாதையோரம் சிதறியதா அல்லது இந்த நிகழ்வில் வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என ரயில்வே போலீஸார் விசாரிக்கின்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in