Published : 24 Aug 2021 12:30 PM
Last Updated : 24 Aug 2021 12:30 PM

பொதுமக்கள் எதிர்பார்க்கும் 5 முக்கிய வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றுக: பேரவையில் எஸ்.பி.வேலுமணி பேச்சு

எஸ்.பி.வேலுமணி: கோப்புப்படம்

சென்னை

பொதுமக்கள் அதிகம் எதிர்பார்க்கும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என, அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று (ஆக.24) நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

"நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளானது தற்போது இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களோடு நேரடித் தொடர்புள்ள சேவைத் துறைகளைப் பிரித்தாளுவது ஏற்புடையது அல்ல. இரண்டு துறைகளும் மீண்டும் ஒரே துறையாக இணைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

அம்மா இருசக்கர வாகன திட்டம் தொடர்வது குறித்து நிதிநிலை அறிக்கையில் ஏதும் குறிப்பிடவில்லை. இத்திட்டத்தை அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அம்மா உணவகம் திட்டத்துக்கு இந்த அரசின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை. இந்த திட்டமானது தற்போது முனைப்பாகச் செயல்படவில்லை. ஏழை, எளிய மக்களின் வயிற்றுப்பசிக்கு ஆதாரமாக விளங்கும் இத்திட்டத்தை இந்த அரசும் தொடர்ந்து செயல்படுத்தவும், ஊக்குவிக்கவும் வேண்டும்.

2020-21ஆம் ஆண்டில், பிரதம மந்திரி வீட்டு வசதித் (கிராம) திட்டத்தின் கீழ் தமிழகத்தில் புதிய வீடுகளைக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இத்திட்டத்தின் பணிகள் தொடர, மாநில நிதி ஒதுக்கீடாக 1,800 கோடி ரூபாய் விடுவிப்பு செய்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள எந்தத் தடையும் இல்லை. இப்பணிகளை விரைந்து நிறைவேற்றிப் பயனாளிகள் பயன்பெற வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

14-வது நிதிக்குழு மானியம் 2021–2022ஆம் ஆண்டு தமிழக அரசின் வெள்ளை அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தால் மத்திய அரசின் 14-வது நிதிக்குழு மானியம் தமிழகத்துக்கு வரவேண்டியது 2,577.98 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிக்காததால், நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததாலேயே, உள்ளாட்சித் தேர்தல் இதுவரையில் நடைபெறவில்லை. தற்போது நீதிமன்ற வழக்குகள் முடிவுற்றுள்ளன. 9 மாவட்டங்களில் நடத்தப்படாமல் உள்ள உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்தால், விடுவிக்கப்படாமல் உள்ள நிலுவை மானியம் 2,577.98 கோடி ரூபாயை மத்திய அரசிடம் இருந்து பெற்று வரவு வைக்க இயலும். எனவே, நிதி இழப்பீடு என்பது ஏற்புடையது அல்ல.

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் உதவியுடன் சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில்,சென்னைக்கு அருகே உள்ள பேரூரில் 6,078.40 கோடி ரூபாயில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 3,041 கோடி ரூபாய் செலவில் நாள் ஒன்றுக்கு 60 மில்லியன் திறன் கொண்ட, இரண்டு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு 2020–21-ல் அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த ஒப்புதல் அடிப்படையில், நிதி உதவியை விரைந்து பெற்று, சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்.

குக்கிராமங்களை அருகிலுள்ள மருத்துவமனைகள், சந்தை மற்றும் பள்ளிகள் போன்றவற்றோடு இணைக்கும் பிரதான சாலைகள் முக்கிய ஊரக இணைப்பு சாலைகளை மேம்படுத்துவதற்கு பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம்-3-ல் எடுத்துக் கொள்ளப்பட்ட பணிகளை விரைவில் செயல்படுத்திட வேண்டும்.

கோவளம் வடிநிலப் பகுதியில் 360 கி.மீ. நீளம் - 1,243.15 கோடி ரூபாயில் கே.எஃப்.டபிள்யூ ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்த எம்1, எம்2, எம்3 திட்டக்கூறுகளாக பிரித்து முதல் கட்டமாக எம்3 - 52 கி.மீ. நீளத்துக்கு 270.38 கோடி ரூபாயில் பணிகள் நடைபெற்று வருகிறது. எம்1, எம்2 திட்டக்கூறு பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திமுக தேர்தல் அறிக்கையில் ஊர்தோறும் சொல்லிய 505 வாக்குறுதிகளை 5 ஆண்டுகளில் செயல்படுத்துவதாகக் கூறுகிறீர்கள். அத்தனையும் உடனே நிறைவேற்ற முடியாது என்பது எங்களுக்கும் தெரியும்.

எனினும், பொதுமக்கள் உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கும் முக்கிய வாக்குறுதிகளான இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,000 ரூபாய், 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி, எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியம், கல்விக் கடன்கள் தள்ளுபடி!, மாணவர்கள் மருத்துவம் பயில அதிகமாய் எதிர்பார்க்கும் நீட் தேர்வு ரத்து போன்ற வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றுங்கள்.

காகிதம் இல்லாத நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்த இந்த அரசு, தனது அறிவிப்புகளையெல்லாம் வெற்றுக் காகித அறிவிப்புகளாக ஆக்கிவிடாமல், மக்கள் நலன் சார்ந்து நிறைவேற்றினால், மக்கள் மனம் மகிழ்வார்கள்".

இவ்வாறு எஸ்.பி.வேலுமணி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x