Published : 24 Aug 2021 03:13 AM
Last Updated : 24 Aug 2021 03:13 AM

மேட்டூர் உள்ளிட்ட தமிழக அணைகளின் கொள்ளளவு மீட்கப்படும் - 200 குளங்கள் சீரமைக்கப்படும்: பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கையை அமைச்சர் துரைமுருகன் நேற்று தாக்கல் செய்தார். முன்னதாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னை

மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை, குண்டாறு, ராமநதி, வெலிங்டன் அணைகள், காவேரிப்பாக்கம் ஏரியின் கொள்ளளவு மீட்கப்படும். பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 23 மாவட்டங்களில் 200 குளங்கள் சீரமைக்கப்படும் என்று பேரவையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. பின்னர், இதற்கு பதில் அளித்து துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் இருந்த போது சில அணைகளைக் கட்டினார்கள். ஆனால் முழுமையாக முடிக்கப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள்தான் ஆகிறது. ஒரேயொரு சாதனை செய்துள்ளோம். சரியாக தூர்வாரி, உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த அரசு பாசனத்துக்கு ஒதுக்கிய தொகையை முழுமையாக செலவு செய்யவில்லை. மத்திய அரசிடம் பணம் பெறுவதில் கூட ஏன் அலட்சியமாக இருந்தார்கள் எனத் தெரியவில்லை. எல்லா உறுப்பினர்களும் அவரவர் தொகுதியில் எத்தனை தடுப்பணை அவசியம் என தெரிவித்தால் பாரபட்சம் இல்லாமல் தடுப் பணைகள் கட்டப்படும்.

புதிய அறிவிப்புகள்

மாநிலத்தின் குறைந்த நீர் ஆதா ரங்களை முறைப்படி பயன்படுத்தி, அவற்றை பாதுகாப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப் படையில், அனைத்து மாவட்டங் களிலும் இந்த ஆண்டில் 190 தடுப்பணைகள், 4 தரைகீழ் தடுப்பணைகள், 6 கதவணைகள், 2 கடைமடை நீரொழுங்கிகள், 12 அணைக்கட்டுகள் உள்ளிட்ட புதிய பாசனக் கட்டுமானங்கள் அமைக்கப்படும்.

மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை, குண்டாறு, ராமநதி, வெலிங்டன் அணைகள், காவேரிப் பாக்கம் ஏரியின் கொள்ளளவு மீட்கப்படும். பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 23 மாவட்டங்களில் 200 குளங்கள் சீரமைக்கப்படும்.

தமிழக அரசின் ‘தலைநிமிரும் தொலைநோக்குத் திட்ட அறிக்கை’யில் கூறப்பட்டுள்ள திட்டங்களின் அடிப்படையில் 31 மாவட்டங்களில் 17 வடிநிலங்களை சேர்ந்த 207 ஏரிகள், கண்மாய்கள், வழங்கு வாய் க்கால்கள், வரத்துக் கால்வாய்கள், குளங்கள், அவற்றின் கட்டுமானங் கள் நபார்டு வங்கி நிதியுதவி யுடன் படிப்படியாக சீரமைக்கப் படும். புதிய, பெரிய நீர் ஆதாரத் திட்டங்களுக்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து, விரிவான மதிப்பீடு தயாரிக்க 7 புதிய திட்டங்களுக்கான ஆய் வுப் பணிகள் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும்.

50 குறுநீர்ப் பாசன குளங்கள்

சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருப்பூர் மாவட்டங் களில் 50 குறுநீர்ப் பாசன குளங் கள் இந்த ஆண்டு தரம் உயர்த்தப்படும். பருவகாலங்களில் மிக குறைந்த நாட்களே கிடைக்கும் மழைநீரை திறம்பட சேமிக்கும் வகையில் வேலூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 3 புதிய குளங்கள் அமைக்கவும், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், தென்காசி, தூத் துக்குடி மாவட்டங்களில் 5 புதிய கால்வாய்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நவீன தொழில்நுட்பங்கள்

நீர்வளத் துறையின் பணிகளை நவீனமயமாக்க நீர்வள ஆதார பராமரிப்புக் கோட்டங்களுக்கு 69 நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆளில்லா விமானங்கள், 214 மடிக்கணினிகள், 214 ஜிபிஎஸ் கருவிகள், 500 பாதுகாப்பு உபகரணத் தொகுப்புகள், 5 புவிசார் தகவல் தொழில்நுட்பம், மென்பொருள், உயர் தொழில்நுட்ப கணினிகள் உள்ளிட்டவை வழங்கப்படும்.

புயல், பெருமழை காலங்களில் மீனவர்கள், மீனவ கிராமங்களுக்கு ஏற்படும் இன்னல்களை போக்க திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சென்னை மாவட்டங்களில் 16 தூண்டில் வளைவு, கடல் அரிப்பு தடுப்புச் சுவர்கள் அமைக்கப்படும்.

தற்காலிக பணியாளர்களில் 10 ஆண்டுகளாக தினக்கூலி பட்டியலில் இருந்து, தற்போது வரை பணிபுரிந்து வரும் 1,458 பணியாளர்களை கல்வித் தகுதி அடிப்படையில் பணி வரன்முறை செய்ய இந்த கூட்டத்தொடர் முடிவதற்குள் நடவடிக்கை எடுக் கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x