

அதிமுக செய்தி தொடர்பாளரான பெங்களூரு வா.புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கி கடந்தஜூன் 14-ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் கூட்டாக அறிக்கைவெளியிட்டனர். இதன்மூலம் தனதுநற்பெயர், அரசியல் பொது வாழ்வுக்கு களங்கம் விளைவித்ததாக கூறி இருவருக்கும் எதிராக, எம்.பி.,எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி அவதூறு வழக்குதொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு இருவரும் ஆகஸ்ட் 24-ம் தேதி(இன்று) நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டும் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவை அவசரவழக்காக விசாரணைக்கு எடுத்து விசாரிக்குமாறு இருவரது தரப்பிலும் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் நேற்று நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு ஆஜராகி முறையீடு செய்தார்.
அதை ஏற்க மறுத்த நீதிபதி, ‘இந்த மனு வழக்கமாக பட்டியலுக்கு வரும்போது விசாரிக்கப்படும். விசாரணை நீதிமன்றத்தில் எதிர்மறையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அதை எதிர்த்து அப்போது உயர் நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று தெரிவித்துள்ளார்.