Published : 24 Aug 2021 03:13 AM
Last Updated : 24 Aug 2021 03:13 AM

அரிசி ஆலை அதிபர் மகனை கடத்தி ரூ.3 கோடி பறித்த கும்பல்: புகார் அளித்த 6 மணி நேரத்தில் நால்வர் கைது

காங்கயம் அருகே நடந்த கடத்தல் சம்பவத்தில் கைது செய்தவர்களை நேற்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் காண்பித்த மாவட்ட காவல்துறை அதிகாரிகள்.

திருப்பூர்/கிருஷ்ணகிரி

திருப்பூரில் போலீஸ் எனக்கூறி, அரிசி ஆலை அதிபரின் மகனைக் கடத்தி ரூ.3 கோடியை மர்மநபர்கள் பறித்தனர். இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி, காடையூரில் அரிசி ஆலை, திருமண மண்டபங்களை வாடகைக்கு விடுதல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். இவரது மகன் சிவபிரதீப்(22). கடந்த 22-ம் தேதி அரிசி ஆலைக்கு வந்த சிவபிரதீப், மதியம் உணவுக்காக காரில் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

காங்கயம் வீரசோழபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த 7 பேர், திடீரென சிவ பிரதீப் காரை மறித்து, அவரை மிரட்டி காருடன் அவரை கடத்தினர். சிவபிரதீப்பை திண்டுக்கல் மாவட்டம் சிறுமலைக்கு கடத்திச் சென்றமர்ம நபர்கள், ஈஸ்வரமூர்த்தியை செல்போனில் தொடர்பு கொண்டனர்.

அப்போது பேசிய கடத்தல் கும்பலைச் சேர்ந்த நபர், “ உங்களது மகனை கடத்தி வைத்துள்ளோம். ரூ.3 கோடி தொகையை கொடுத்தால் அவரை விட்டுவிடுகிறோம். இல்லையெனில் அவரை கொன்று புதைத்து விடுவோம். ரூ.3 கோடி தொகையை திண்டுக்கல் மாவட்டம் பழநி சாலைக்கு கொண்டு வந்து கொடுங்கள். போலீஸாரிடம் செல்லக் கூடாது’’ என எச்சரித்துவிட்டு மீண்டும் அழைப்பதாக கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.

அதிர்ச்சியடைந்த ஈஸ்வரமூர்த்தி மகனை மீட்க வேண்டி, ரூ.3 கோடி பணத்துடன் திண்டுக்கல்லுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றார். பழநி சாலையில் உள்ள ஒரு இடத்தில் ஈஸ்வரமூர்த்தி காத்திருந்தார். அங்கு வந்த மர்மநபர்கள், அவரிடம் பணத்தை வாங்கிவிட்டு, சிவபிரதீப்பை விட்டுவிட்டு மற்றொரு காரில் தப்பினர். பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக ஈஸ்வரமூர்த்தி காங்கயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி முத்துசாமி ஆகியோரது மேற்பார்வையில், எஸ்பி சசாங் சாய் உத்தரவின் பேரில், காங்கயம் டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கடத்தலில் ஈடுபட்டவர்கள் மதுரையில் உள்ள ஒரு இடத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீஸார் 3 பேரை பிடித்தனர். பிடிபட்டவர்கள் சக்திவேல்(37), அகஸ்டின்(45), பாலாஜி (38) எனத் தெரிந்தது. இவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 69 லட்சத்து 50 ஆயிரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். மற்றொரு நபரான பஷீர் (32) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிடிபட்டார்.

அவரிடம் இருந்து ரூ. 20 லட்சத்து 44 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் மூவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பிடிபட்டது எப்படி - ஐஜி விளக்கம்

மேற்கு மண்டல ஐஜி சுதாகர் கூறும்போது, “சம்பவம் நடந்த பகுதி, பணம் கொடுத்த இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் குற்றவாளிகளை பிடிக்க உதவின. கடத்தல்காரர்கள் முதலில் சிறுமலை வழியாக சென்றனர். அங்குள்ள உணவகத்தில் உணவருந்திவிட்டு தப்பிஉள்ளனர். அவர்கள் குறிப்பிட்ட வகை காரை பயன்படுத்தியது தெரியவந்தது. அதன்படி குற்றவாளிகளை பின் தொடர்ந்ததில் அவர்கள் சிக்கினர். சிவபிரதீப்பின் அரிசி ஆலையில் கிரேன் ஆபரேட்டர் பணியில் உள்ள 2 பேர், கடத்தலுக்கு மூளையாக இருந்துள்ளனர். ஈஸ்வரமூர்த்தியிடம் பணப்புழக்கம் இருப்பதை அறிந்து, திட்டமிட்டு கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். ஆங்கிலப் படங்களின் காட்சிகளையும் ஒத்திகை பார்த்துள்ளனர். போலீஸ் எனக்கூறி சிவபிரதீப் காரில் ஏறி அவரை கடத்தினர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x