Published : 24 Aug 2021 03:13 AM
Last Updated : 24 Aug 2021 03:13 AM

சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ; கோயில் இடிப்பு சம்பவத்தின் பின்னணி என்ன?

மதுரை அருகே ஒத்தக்கடை- திருவாதவூர் சாலையில் புது தாமரைப்பட்டியை அடுத்துள்ளது இலங்கிப்பட்டி. இங்கு சாலையோரம் சிறிய கோயில் ஒன்று உள்ளது. இதை வாழவந்தான் அம்மன் கோயில் என அழைக்கின்றனர். இக்கோயில் அருகே பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இலங்கியேந்தல் கண்மாய் மறுகால் பாயும் இடத்தை ஒட்டியுள்ளகாலியிடத்தில் வாழவந்தான் அம்மன் கோயில் அருகே புதிதாக மற்றொரு கோயிலும் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக வாழவந்தான் அம்மன் சிலையும் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், பொதுப்பணித் துறை கண்மாய் இடத்தை கண்ணன் என்பவருடைய தரப்பினர் ஆக்கிரமித்து கோயில் கட்டி
யிருப்பதாகவும், அதை அகற்றஉத்தரவிடக் கோரி அருண்குமார்என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, கண்மாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற 3.8.2020-ல் உத்தரவிட்டதை அடுத்து கோயிலை இடிக்க அதிகாரிகள் நோட்டீஸ் தந்தனர்.

பின்னர் இலங்கியேந்தல் கண்மாயில் நில அளவு மேற்கொள்ளக் கோரி துளசிராமன் என்பவரும், ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரி யோகராஜன் என்பவரும் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கறிஞர் ஆணையர்ஆய்வு செய்ய உத்தரவிட்டது, அவர் ஆய்வு செய்து, கண்மாய் பகுதியில் கோயில் கட்டியிருப்பதாகவும், அங்கு சாமி சிலைஇல்லை என்றும் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்தே கோயிலை உடனடியாக அகற்ற வேண்டும் என 9.7.2021-ல் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றனர். அங்கு மனு தள்ளுபடியான நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் கோயில் இடிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘மதுரை ஒத்தக்கடை அருகே கோயிலை இடிக்கும் கொடூர அரசு, கொதிக்குதே எங்கள் மனசு’ என்ற வாசகத்துடன் கோயிலை இடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் குறித்து ஒருதரப்பினர் கூறுகையில், ‘உள்ளாட்சித் தேர்தலில் தோற்ற தரப்பினர் மக்கள் மீதான கோபத்தை தீர்ப்பதற்காக நீதிமன்றம் வரை சென்று உத்தரவு பெற்றுள்ளனர். கோயிலால் நீர்நிலைக்கும், வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை' என்றனர்.

மற்றொரு தரப்பினர் கூறுகையில், ‘இலங்கிப்பட்டியைச் சேர்ந்த சிலர் பலரிடம் பணம் வசூலித்து கண்மாய் பகுதியை ஆக்கிரமித்து கோயில் கட்டியுள்ளனர். மறுகால் பகுதியில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள வேண்டிய சூழல் இருந்தால், கோயில் கட்டப்பட்டுள்ள பகுதியில் இருந்தே மேற்கொள்ள முடியும். நீதிமன்றம் சென்றதற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்றனர். இலங்கிப்பட்டியில் கோயில் இடிக்கப்பட்ட பகுதியில் தற்போது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x