

குடும்ப நல வழக்குகளை ஆண்டுக் கணக்கில் கிடப்பில் போட்டு திருமண உறவுகளை கொந்தளிக்க விடக்கூடாது என குடும்ப நல நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த கதிரேசன் (பெயர் மாற்றப்பட்டுள் ளது), மனைவி தன்னுடன் வாழ மறுப்பதால் தங்களது திருமணம் செல்லாது என அறிவிக்கக் கோரி 2003-ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 13 ஆண்டுகளாக சென்னை 3-வது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் கிடப்பில் உள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கை விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கதிரேசன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.விமலா பிறப்பித்த உத்தரவு வருமாறு:
திருமண பந்தத்தில் ஏற்பட்ட சோகத்தின் காரணமாகத்தான் கணவனோ, மனைவியோ குடும்ப நல நீதிமன்றத்தை நாடுகின்றனர். ஆனால், அங்கும் வழக்குகளை விசாரிக்கிறோம், விசாரிக்கிறோம் எனக்கூறி ஆண்டுக்கணக்கில் கிடப்பில்போட்டு அந்த உறவுகளை மேலும் கொந்தளிக்க விடக்கூடாது. தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும்.
விசாரணை காலதாமதமானால் உணர்வுபூர்வமான வலியையும், வேதனையையும் ஏற்படுத்தும். தற்போது விவாகரத்து கோரி வழக்குகள் அதிகம் தாக்கல் செய்யப்படுகின்றன. கடுமையாக உழைத்தும்கூட இந்த வழக்குகளை குடும்ப நல நீதிபதிகளால் ஒரு முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. மனுதாரர் அல்லது எதிர்மனுதாரர்களின் தேவையற்ற இழுத்தடிப்புகளால் வழக்கு எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது.
குடும்ப நல வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண் டும் என்பதற்காகத்தான் குடும்ப நல நீதிமன்றங்களே உருவாக்கப் பட்டன. இந்த வழக்கு கடந்த 13 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம், ஒரு குடிமகனின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்கிறது. எனவே, குடும்பநல நீதிமன்றங்கள் திருமண உறவு தொடர்பான வழக்கை விரைவாக விசாரித்து முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
குடும்ப நலம் தொடர்பான எந்தவொரு வழக்கையும் அதிகபட்சம் 6 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். அந்த தீர்ப்பை எதிர்த்து செய்யப்படும் மேல்முறையீட்டு வழக்கை உயர் நீதிமன்றம் 3 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று குடும்பநல சட்டப்பிரிவுகள் உள்ளன.
கிடப்பில் உள்ள வழக்குகளால் மனுதாரர்களின் மனஅமைதியும் குலைகிறது. குழந்தைகளின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று. எதிர்காலத்தைக்கூட அவர்களால் திட்டமிட முடியவில்லை. குழந்தை பெற்றுக்கொள்ளும் பருவத்தையும் தாண்டிவிடுகின்றனர். சிலர் கள்ளத் தொடர்புக்கு ஆளாகின்றனர். சிலர் இரண்டாவது திருமணம் செய்து கொள்கின்றனர். எனவே, மனுதாரரின் இந்த வழக்குக்கு முக்கியத்துவம் கொடுத்து 8 வாரத்துக்குள் குடும்பநல நீதிமன்றம் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.