

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்காததைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் சாலையோரத்தில் `மக்கள் நாடாளுமன்றக் கூட்டம்' நேற்று நடைபெற்றது.
உளவு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி, நாடாளுமன்றக் கூட்டத் தொடரை எதிர்க் கட்சிகள் முடக்கின. எனினும், 20-க்கும் மேற்பட்ட மசோதாக்கள், விவாதங்கள் இன்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. இதைக் கண்டித்து ஆகஸ்ட் 23 முதல் 27-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் `மக்கள் நாடாளுமன்றக் கூட்டம்' நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன் அறிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பூந்தமல்லி சாலையில் கங்கையம்மன் கோயில் அருகே நேற்று காலை நடைபெற்ற `மக்கள் நாடாளுமன்றக் கூட்டத்தை' சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். இதில், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன், துணைச் செயலர் மு.வீரபாண்டியன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.ஏழுமலை, வஹிதா நிஜாம், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.ஏ. முத்தழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி வி.கே.கோபாலன் மக்களவைத் தலைவர்போல அமர்ந்து, மக்கள் நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்தினார். தொடர்ந்து, மத்திய பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பலரும் பேசினர்.
நிறைவாகப் பேசிய இரா.முத்தரசன், “பெகாசஸ் உளவு விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த மறுத்ததால்தான் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கின. ஆனால், ஜனநாயகத்துக்கு துளியும் மதிப்பளிக்காமல், எவ்வித விவாதங்களுமின்றி 20-க்கும் மேற்பட்ட, முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லவே மக்கள் நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்துகிறோம்'' என்றார்.
தொடர்ந்து, விவாதங்கள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், வேளாண் சட்டங்கள், மின்சார திருத்தச் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மக்கள் நாடாளுமன்றக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.