

இந்த ஆண்டு கரோனா பேரிடர் காலத்திலும், 55 ஆயிரம் இந்திய மாணவர்கள் அமெரிக்கா சென்று கல்வி பயில விசா வழங்கப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் அதுல் கெஷாப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதுல் கெஷாப், டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி கற்பது என்பது தனித்தன்மை வாய்ந்த மற்றும் வாழ்க்கையை மாற்றக்கூடிய அனுபவத்தை கொடுக்கக் கூடியதாகும்.
கல்வியில் மிக உயர்ந்த நிலையை அடைந்து, அமெரிக்க சமூகத்தை வளப்படுத்துவதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதிலும் இந்திய மாணவர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள்.
இந்திய மாணவர்களை கல்விக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லும் திட்டத்தை செயல்படுத்தும் குழுவுக்கு, கரோனா பேரிடர் காலம் ஏற்படுத்திய போக்குவரத்து பாதிப்புகள் பெரும் சவாலாக இருந்தன.
இந்தியாவில் ஏற்பட்ட கரோனா 2-வது அலை, மாணவர்களுக்கு விசா வழங்குவதற்கான பணிகளை தொடங்கும் நிகழ்வை 2 மாதங்கள் தாமதமாக்கியது. ஜூலையில் சாதகமான சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு விசா வழங்குவதற்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க தொடங்கியது.
தூதரக குழுவினரின் கடும் உழைப்பால், கரோனா பேரிடர் காலத்தில் மாணவர்களுக்கு கூடுதல் எண்ணிக்கையில் விசாக்கள் வழங்கப்பட்டன. 2021-ம் ஆண்டில் இதுவரை 55 ஆயிரம் மாணவர்கள் அமெரிக்கா செல்ல விசா வழங்கப்பட்டுள்ளது. தினமும் ஏராளமான மாணவர்களுக்கு விசா அனுமதி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
பன்முகத்தன்மை கொண்ட அமெரிக்க கல்வி முறை ஈடு இணையற்ற, தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை கொண்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கல்வி வாய்ப்பு தொடர்பான விவரங்களை https://educationusaindia.usief.org.in/ என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். விருப்பம் உள்ள மாணவர்கள் வரும் 27-ம் தேதி மற்றும் செப்டம்பர் 3-ம் தேதி நடைபெறும் இணைய வழி கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்றார்.