

மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் ஓரிக்கையில் உள்ள மகா பெரியவர் மணி மண்டபத்தில் சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். இவர் வரும் 27-ம்தேதி மணிப்பூர் ஆளுநராக பொறுப்பேற்க உள்ளார்.
பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் பதவியேற்க உள்ள நிலையில் ஓரிக்கையில் உள்ள மகா பெரியவர் மணி மண்டபத்துக்கு வந்தார். அங்கு சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். இதைத் தொடர்ந்து இருவரும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தனி அறையில் ஆலோசனை நடத்தினர். மணிப்பூர் மாநிலத்தில் சங்கர மடத்தின் மூலம் செய்யப்படும் பணிகள் குறித்து ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இல.கணேசனிடம் தெரிவித்தார்.
பின்னர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியது:
மணிப்பூர் ஆளுநராக பொறுப்பேற்கும்படி குடியரசுத் தலைவர் தொலைபேசி மூலம் எனக்கு தெரிவித்தார். பிரதமரும் தெரிவித்தார். சாதாரண தொண்டனாக பொது வாழ்க்கையில் பணியை தொடங்கி 52 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மணிப்பூர் ஆளுநரநாக வரும் 27-ம் தேதி பொறுப்பேற்க உள்ளேன். சங்கர மடத்துக்கும் எனக்கும் நீண்ட கால தொடர்பு உண்டு. எனவே, சங்கர மடத்தின் மடாபதியை சந்தித்து ஆசி பெற வந்தேன் என்றார்.