மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டதால் பாஜகவில் இருந்து விலகினார் இல.கணேசன்

மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டதால் பாஜகவில் இருந்து விலகினார் இல.கணேசன்
Updated on
1 min read

மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்,அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார்.

பாஜக மூத்த தலைவராக இருந்த இல.கணேசனை மணிப்பூர் மாநில ஆளுநராக நியமித்து நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு வெளியிட்டார். அடுத்த சில நாட்களில் மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் பதவியேற்க இருக்கிறார்.

ஆளுநர் பதவி அரசியல் சாசனப் பதவி என்பதால் அப்பொறுப்பில் இருப்பவர்கள் அரசியல் கட்சியில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட எந்தப் பொறுப்பிலும் இருக்க முடியாது.

இதனால், தமிழக பாஜக தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் நேற்று மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையை சந்தித்த இல.கணேசன், பாஜகதேசிய செயற்குழு உறுப்பினர்,அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை அளித்தார்.

கடந்த 1991-ல் ஆர்எஸ்எஸ் மாநில இணை அமைப்பாளராக இருந்த இல.கணேசன், பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அன்று முதல் கடந்த 30 ஆண்டுகளாக அவர், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். ஆளுநராக நியமிக்கப்பட்டதால் தற்போது அப்பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

கி.வீரமணி வாழ்த்து

மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்ட இல.கணேசனுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகத்தில் உள்ள பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான நண்பர் இல.கணேசன், ஆர்எஸ்எஸ் பாஜகவில் இணைந்த காலம் முதற்கொண்டு கட்சிப் பணிகளில் ஈடுபட்டு உழைத்தவர். கட்சி, கொள்கை தாண்டி எவரிடமும் அன்புடன் பழகக்கூடிய பண்பாளர். மணிப்பூர் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவிருக்கும் அவருக்கு வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in