Published : 24 Aug 2021 03:14 AM
Last Updated : 24 Aug 2021 03:14 AM

2015-ம் ஆண்டில் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட காரணம் என்ன?- பேரவையில் திமுக, அதிமுக, காங்கிரஸ் விவாதம்

கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டதற்கு காரணம் குறித்து திமுக, அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையில் கடும் விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் நீர்வளத் துறை மானிய கோரிக்கையின்போது நடைபெற்ற விவாதம்:

ஏ.பி.நந்தகுமார் (திமுக) : கடந்த2015-ல் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்ததால் தான் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: செம்பரம்பாக்கம் ஏரி உடையவில்லை. அவைக்கு தவறான தகவலைதரக்கூடாது. ஏரியின் உபரி நீர் வெளியேறியதால் தான் வெள்ளம் ஏற்பட்டது. தற்போது கூட மழையால் அதிகப்படியான நீர் சூழ்ந்து வருகிறது.

நந்தகுமார்: கடந்த ஆட்சியில் மழைநீர் கால்வாய்களை தூர்வாராததால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி: கடந்த ஆட்சி காலத்தில் சென்னையில் மழைநீர் கால்வாய்களை தூர்வாரி 15 நாட்கள் தேங்கிய நீரை, 5 நாட்கள் என்று குறைத்துள்ளோம்.

கு.செல்வபெருந்தகை (காங்கிரஸ்) : செம்பரம்பாக்கம் ஏரி எனது  பெரும்பதூர் தொகுதியில் உள்ளது.கடந்த 2015-ம் ஆண்டு, செம்பரம்பாக்கம் ஏரியில் மழைநீர் நிரம்பிய நிலையில், 4 நாட்களாக அணையை திறக்க முதல்வரின் உத்தரவுக்காக காத்திருந்தனர். அதன்பின் தண்ணீரை ஒரே நேரத்தில் திறந்து விட்டதால் தான் இந்தநிலை ஏற்பட்டது.

பழனிசாமி: செம்பரம்பாக்கம் ஏரி மட்டுமல்ல; அதை சுற்றியுள்ள 100 ஏரிகளின் உபரிநீரும் சேர்ந்ததால் தான் இந்த நிலை ஏற்பட்டது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: கடந்த 2015-ல் வெள்ள பாதிப்புக்கான காரணம் தொடர்பாக, மத்திய தணிக்கைத்துறை தலைவரின்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்போது அதை சட்டப்பேரவையில் வைக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது அறிக்கைதொடர்பாக தணிக்கைத் துறையிடம் விளக்கம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின் 2 ஆண்டுகள் கழித்தே அவையில் வைக்கப்பட்டது. அந்த அறிக்கையில், ஏரியை திறப்பதற்கான அனுமதியை பெற முதல்வரை தொடர்பு கொள்வதில் தாமதம்ஏற்பட்டதால் உடனடியாக திறக்கமுடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனிசாமி: மழைக்காலம் வரும்போது, ஏரி, குளங்களை திறப்பது குறித்து சூழலுக்கு தகுந்தபடி முடிவெடுத்து, அந்தந்த பொதுப்பணித் துறை பொறியாளர்களே திறப்பார்கள். அதற்கெல்லாம் அரசிடம் கேட்க மாட்டார்கள். ஆனால், பாசனத்துக்கு திறப்பது தொடர்பாக அரசின் உத்தரவை பெற்று திறப்பார்கள்.

நந்தகுமார்: கடந்த அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த திட்டத்தில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இவை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x