Published : 24 Aug 2021 03:14 AM
Last Updated : 24 Aug 2021 03:14 AM

கரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பால் மெரினா கடற்கரை, பூங்காக்களில் குவிந்த பொதுமக்கள்: வண்டலூர், கிண்டி பூங்காக்கள் திறக்கப்படாததால் பார்வையாளர்கள் ஏமாற்றம்

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரை மற்றும் செம்மொழிப் பூங்கா உள்ளிட்டவை நேற்று திறக்கப்பட்டன. முதல் நாளே அவற்றில் ஏராளமான மக்கள் குவிந்தனர்.

தமிழகத்தில் கரோனா பரவல் வெகுவாகக் குறைந்துவருகிறது. இந்நிலையில், ஊரடங்கு அமலில் இருந்தாலும், பொது இடங்களில் மக்கள் கரோனா பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றவேண்டும் என்ற அறிவுறுத்தலுடன், பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது.

அதேசமயம், பாதுகாப்பு விதிகளை மக்கள் முறையாகப் பின்பற்றுகின்றனரா என்பதைக் கண்காணிக்கவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

அரசு அறிவித்த புதிய தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, சென்னையில் மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரைகளில் நேற்று பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டதால், ஏராளமானோர் உற்சாகத்துடன் கடற்கரைகளுக்கு வந்து, மணலில் விளையாடியும், கடல் நீரில் குளித்தும் மகிழ்ந்தனர்.

மெரினாவில் உள்ள கலங்கரைவிளக்கத்தைப் பார்வையிடவும்மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

செம்மொழிப் பூங்கா, செங்காந்தள் பூங்கா, சேத்துப்பட்டு ஏரிசுற்றுச்சூழல் பூங்கா ஆகியவற்றில் ஏற்கெனவே காலை6 மணி முதல் 9 மணி வரைநடைப்பயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதிவழங்கப்பட்டது. நேற்று முதல்காலை 9 மணிக்கு மேல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

கோவளம் அடுத்த முட்டுக்காடுபடகு குழாமும் நேற்று திறக்கப்பட்டது. படகு குழாம்நுழைவுவாயிலில் சுற்றுலாப் பயணிகளின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டதுடன், கைகளை தூய்மைப்படுத்த கிருமிநாசினி திரவமும் வழங்கப்பட்டது. அதன் பிறகேசுற்றுலாப் பயணிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பு கவசங்களும் தூய்மைப்படுத்தி வழங்கப்பட்டன. படகுகுழாம் திறப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் படகு சவாரி செய்தனர்.

உயிரியல் பூங்காக்களைத் திறக்க அரசு அனுமதித்துள்ள நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர்பூங்கா ஆகியவை நேற்றுதிறக்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பான வழிகாட்டுநெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் செயலர்உத்தரவு பிறப்பித்த பிறகே, இவற்றைத் திறக்க முடியும். ஓரிரு தினங்களில் திறக்க வாய்ப்புள்ளது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x