

வென்டிலேட்டர் கேட்டு, டுவிட்டரில் பதிவிட்டவருக்கு ஆளுநர் தமிழிசை உதவியுள்ளார்.
புதுவையை சேர்ந்த 68 வயது மூதாட்டி நுரையீரல் பிரச்சினை காரணமாக பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வென்டிலேட்டர் தேவைப்பட்டது. வென்டிலேட்டர்கள் காலியாக இல்லாததால் வெளியில் இருந்து ஏற்பாடு செய்ய நிர்வாகம் அறிவுறுத்தியது. மூதாட்டியின் உறவினர் வருண், வென்டிலேட்டர் உதவி கேட்டு ஆளுநருக்கு டுவிட்டரில் பதிவிட்டார்.
இதைப்பார்த்த ஆளுநர் தமிழிசை இரவு 11.30 மணிக்கு சுகாதாரத்துறை செயலர் அருணுக்கு தகவலை தெரிவித்தார். சில நிமிடத்தில் அரசு டாக்டர் துரைசாமி மூதாட்டியின் விவரத்தை சேகரித்து வருணை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டார். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒரு நோயாளி வேறு மருத்துவமனை சென்றதால் அந்த வென்டிலேட்டர் வசதி மூதாட்டிக்கு தரப்பட்டது.
டுவிட்டரில் உதவி கேட்டவருக்கு நள்ளிரவிலும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உதவியதற்காக, ஆளுநருக்கு மூதாட்டியின் உறவினர்கள் டிவிட்டரில் நன்றி தெரிவித்தனர்.