

உணவு மானியத்துக்கு இடைக் கால பட்ஜெட்டில் ரூ.5 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இடைக்கால பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 2 கோடியே 2 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. கிலோ ஒன்றுக்கு 13 ரூபாய் 50 பைசா என்ற மானிய விலையில் மாதம்தோறும் சுமார் 36 ஆயிரத்து 500 டன் சர்க்கரையை அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. இதேபோல் பருப்பு கிலோ ரூ.30, சமையல் எண்ணெய் லிட்டர் ரூ.25 என்ற விலையில் வழங்கி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் உணவு மானியமாக ரூ.25 ஆயிரம் கோடியும், பொது விநியோகக் கடைகளை நடத்துவதற்காக கூட்டுறவு அமைப்புகளுக்கு ரூ.762 கோடியே 93 லட்சம் நிர்வாக மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், உணவு மானியத்துக் காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.5 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 77 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், 530 அம்மா உணவகங்கள், 106 அம்மா மருந்தகங்கள் மற்றும் அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமென்ட் போன்ற புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.