Published : 23 Aug 2021 07:26 PM
Last Updated : 23 Aug 2021 07:26 PM

நல்லாட்சிக்கு நேர்மையான அதிகாரிகள் மட்டும் போதுமா?- முதல்வர் ஸ்டாலினுக்கு இயக்குநர் தங்கர்பச்சான் கேள்வி

கடந்த ஒரு வாரமாக மின் கட்டணக் கணக்கீட்டு முறைக்கு இணையாகப் பேசப்பட்டது அமைச்சர் செந்தில் பாலாஜி- இயக்குநர் தங்கர்பச்சான் விவகாரம். திரைப்பட இயக்குநர், தமிழ் ஆர்வலர், அரசியல் விமர்சகர் எனப் பல துறை சார்ந்தும் தங்கர் பச்சானுடன் ’இந்து தமிழ்’ இணையதளம் சார்பில் ஒரு சிறப்பு நேர்காணல்:

‘’ மின் கட்டண விவகாரத்தில் உண்மையில் என்னதான் நடந்தது?

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரம் கணக்கெடுப்பதால், கட்டணத் தொகை அதிகமாக வருகிறது. இந்த முறையை மாற்றி, திமுக ஏற்கெனவே தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல மாதாமாதம் கணக்கெடுக்க வேண்டும் என்று ஊடகங்கள் மூலமாகக் கோரிக்கை விடுத்திருந்தேன். உடனே சில அதிகாரிகள் நேரில் வந்து பேசினர். அவர்களிடம் மின் கணக்கீட்டு முறையை மாற்றக் கோரினேன். அன்று மாலையே மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எனக்கு விளக்கம் கொடுத்துவிட்டதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையே சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏ அண்மையில் எழுப்பிய ஒரு கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் கணக்கீட்டில் குளறுபடி உள்ளதாக சமூக வலைதளங்களில் நான் புகார் தெரிவித்ததாகவும், அதற்கு உடனே அதிகாரிகள் விளக்கம் அளித்து விட்டதாகவும், அதன் பின் நான் `சாரி' என்று கூறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

முதலில் நான் புகாரே அளிக்கவில்லை, கோரிக்கைதான் விடுத்தேன். மேலும் மன்னிப்பும் கேட்கவில்லை. அதனால் பேரவையில் அமைச்சர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அதற்கு அவரிடமிருந்து இதுவரை எந்தவொரு தக்க பதிலும் கிடைக்கப் பெறவில்லை.

எனது கேள்விக்கு பதிலளிக்கும்விதமாக நேற்று பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, படிப்படியாக மின் கட்டணக் கணக்கீடு முறை மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். இதைப் படிப்படியாக எப்படி மாற்ற முடியும்? அதேபோல ஒவ்வொரு யூனிட் மின்சாரத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான கட்டணம் என்ற முறையையும் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.

அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறீர்கள். பல்வேறு தரப்பினரும் முன்வைக்கும் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதில் என்ன தடை இருப்பதாகக் கருதுகிறீர்கள்?

ஒரு மனிதன், அவன் வாழ்நாளில் அதிகம் செலவிடுவது கல்விக்கும் மருத்துவத்துக்கும்தான். அரசு கல்வியைக் கொடுத்தாலும் ஏன் எல்லோரும் தனியாரையே அதிகம் நாடுகிறார்கள்?

மக்களின் வரிப்பணத்தில் 50 விழுக்காட்டுக்கு மேல் அரசு ஊழியர்களுக்காகவே செலவிடப்படுகிறது. அரசு ஊழியர்களே அரசு மருத்துவமனைக்குச் செல்வதில்லை. அவர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்புவதில்லை. எந்த அரசியல்வாதி அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கிறார்?

ஒவ்வோர் அரசியல்வாதியும் தனித்தனியாகப் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகளை வைத்திருக்கின்றனர். இதனாலேயே மருத்துவமும், கல்வியும் வணிகமாகிவிட்டது. அவர்களுக்கு வருமானம் வேண்டும் என்பதற்காக மக்களைக் கொன்று கொண்டிருக்கின்றனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழ்நாட்டுக்கு எத்தனையோ திட்டங்களைக் கொண்டுவந்தார். ஆனால், அவர் உயிர் பிழைக்கத் தனியார் மருத்துவமனைக்குத்தானே சென்றார்? ஏராளமான மருத்துவத் திட்டங்களைக் கொண்டுவந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏன் தனியார் மருத்துவமனைக்குச் சென்றார்?

அரசு ஊழியர்களுக்கு அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் சேவை கட்டாயமாக்கப்பட்டால், அவர்களுக்காகவாவது அவற்றின் தரம் உயர்த்தப்படும்.

இவற்றையெல்லாம் தாண்டி திராவிடக் கட்சிகள்தானே மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கின்றன?

இதற்கு முதலில் இந்தியா முழுவதும் ஒவ்வொரு கட்சிக்குமான நிரந்தரச் சின்னத்தை ஒழிக்க வேண்டும். பெரும்பாலான திருடர்கள் சின்னத்துக்குப் பின்னால்தான் ஒளிந்து கொள்கிறார்கள். எவ்வளவு பெரிய குற்றம் செய்தவரும் சின்னத்தை அடையாளமாக்கி வெற்றி பெற்று, பதவி, அதிகாரத்துடன் வலம் வந்து நம்மையே ஆள்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அவர்களால் ஒவ்வொரு சின்னத்தில் நிற்க முடியுமா? இதை மாற்றத் தேர்தல் ஆணையம் எப்போதாவது முன்வந்திருக்கிறதா?

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி எப்படி இருக்கிறது?

முதல்வர் நேர்மையான அதிகாரிகளை நியமித்திருக்கிறார். ஆனால், அவர்களை மட்டுமே வைத்து நல்லாட்சியைத் தந்துவிட முடியாது. முதல்வர் ஸ்டாலின் எதையாவது மக்களுக்குச் செய்ய வேண்டும் என்று நினைப்பதை அனைவரும் உணர்கிறோம். அந்த நினைப்பு மட்டுமே போதாது. அரசியல் என்பது முதல்வர் மட்டுமே செய்வதில்லையே. அனைத்து அமைச்சர்களும் அதற்கு மனது வைக்க வேண்டும்.

இலவசக் கல்வி, மருத்துவம், தூய்மையான காற்று, நீர், நஞ்சில்லாத உணவு இவை அனைத்தையும் தருவோரின் ஆட்சியே நல்லாட்சி.

விவசாயத்துக்கான தனி நிதிநிலை அறிக்கையை இதற்கான தொடக்கம் எனலாமா?

இதுவெல்லாம் சட்டப்பேரவையில் படிக்க நன்றாக இருக்கும். நடைமுறையில் சாத்தியமா? முதலில் அமைச்சர்கள் சென்னையில் இருந்து விவசாயிகளைச் சந்திக்கத் தயாரா? ஏற்கெனவே உள்ள பல நல்ல திட்டங்களே விவசாயிகளுக்கு முறையாகச் சென்று சேர்வதில்லை. அரசு 100 ரூபாய் ஒதுக்கினால், 10 ரூபாய் கைக்குக் கிடைப்பதே பெரும்பாடாக இருக்கிறது.

அதேபோல எப்படியும் தேர்தல் வந்தால் தள்ளுபடி கிடைக்கும் என்றே நிறையப் பேர் பயிர்க் கடன் பெறுகிறார்கள். எதற்கு இந்த 100 நாள் வேலைத் திட்டம்? அதை 150 நாட்களாக்கிவிட்டார்கள். இத்திட்டத்தால் ஏதாவது உருப்படியாக நடந்திருக்கிறதா? மக்கள் சோம்பேறியானதுதான் மிச்சம். இலவசத்தையும் டாஸ்மாக்கையும் முதலில் நிறுத்துங்கள். பனங்கள்ளையும் தென்னங்கள்ளையும் அனுமதியுங்கள். உடல்நலம் காக்கப்படும். பனை மரங்களும் காப்பாற்றப்பட்டு, அவற்றில் ஏற மனிதர்களும் உயிருடன் இருப்பார்கள். ரேஷன் கடைகளில் அறிவித்ததுபோல பனங்கருப்பட்டிகளை விற்க முடியும். இதைச்செய்யாமல் போனால், பனை மரத்தை பார்த்துக்கொண்டே மட்டும் நிற்கலாம்.

தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்த நீங்கள், இடையில் சில காலம் அமைதி காத்தது ஏன்?

ஒருகட்டத்தில் மக்கள் மீதே வெறுப்பு வந்துவிட்டது. யாருக்காகக் குரல் கொடுக்கிறோமோ அவர்களே அதைப் புரிந்துகொள்ளாத சூழலில்தான் எதுவும் பேசாமல் இருந்தேன்.

ஒரு கட்சி, எதிர்த் தரப்பில் உள்ள ஆளைக் கடுமையாகத் திட்டும். அடுத்த நாளோ, அடுத்த மாதமோ அவர் தங்கள் கட்சியில் இணைந்தால் ஆரத் தழுவி, சால்வை போர்த்தும். வெட்கமாக இல்லையா இவர்களுக்கு? எந்தக் கட்சிகள் நேர்மையைத் தகுதியாக வைத்து உறுப்பினர்களைச் சேர்க்கிறார்கள்? நான் அப்படி ஒரு சூழலை எதிர்பார்க்கிறேன். ஆனால், இங்கே உள்ளதா?

சூழலைப் புரிந்துகொள்ளாமல், சமூக வலைதளங்களில் கேலி, கிண்டல், விமர்சனம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நீங்களும் அதை எதிர்கொண்டிருக்கிறீர்களே...

அவர்களை இணையக் கூலிகள் என்றுதான் சொல்ல வேண்டும், கட்சிகளிடம் இருந்து காசு வாங்கிக்கொண்டு விமர்சிப்பவர்கள் அவர்கள். அவரவர் தலைவர்களின் படங்களை வைத்துக்கொண்டு அவர்கள் செய்வதெல்லாம் சரி என்று எழுதுகிறார்கள். பொதுச் சமூகத்தின் சிந்தனைகளுக்கு இடமே இல்லாமல் போகிறது.

ஒரே நபர் நூற்றுக்கணக்கான கணக்குகளில் வெவ்வேறு பெயர்களில், பாலினங்களில் இயங்குகிறார். இதனால் எத்தனை குற்றங்கள் நடைபெறுகின்றன? எத்தனை சைபர் க்ரைம் வழக்குகள் தொடுக்கப்படுகின்றன? அதற்காகத்தான் ஒவ்வொரு சமூக வலைதளக் கணக்கும் ஆதாரைக் கட்டாயமாக்கச் சொல்கிறேன். ஆனால், பெரும்பாலான கட்சிகள் இவ்வாறான கூட்டத்தை வைத்திருப்பதால் என் கோரிக்கை மறுக்கப்படுகிறது.

ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டில் சுமார் 35 அமைச்சர்கள் நியமிக்கப்படுகிறார்கள். எத்தனை பேர் அவர்களின் திறமையால், செயல்பாடுகளால் அறியப்படுகிறார்கள். வெகுசிலர் மட்டுமே. மீதமுள்ளோர் குற்றச் சம்பவங்களாலும் மருத்துவமனையில் அனுமதி, விபத்து ஆகியவற்றின் போதுமே மக்களால் அறியப்படுகிறார்கள்.

கமல்ஹாசனின் அரசியல் எப்படி இருக்கிறது?

கமல் குறித்த பார்வை அவரின் படங்களைக் கொண்டே இருக்கிறது. அரசியலுக்கு வரும்போது நானாக இருந்தாலும் அப்படித்தான் பார்க்கிறார்கள், அது வேண்டாம் என்றுதான் சொல்வேன்.

கமலைப் பொறுத்தவரை என் எண்ணங்களை நிறைய நேரங்களில் அப்படியே பிரதிபலிக்கிறார். உதாரணத்துக்கு, கலைஞர்கள் அவர்களாகவே விருதுக்கு விண்ணப்ப வேண்டும் என்ற நடைமுறையை விமர்சித்திருந்தார் கமல். இதுபோலப் பெரும்பாலான விவகாரங்களில் அவரின் பாதை சரியாகவே இருக்கிறது.

ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் இந்த நிலை மாறியிருக்குமா? முன்னதாக அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தீர்கள்...

நிச்சயமாக. எல்லோரையும்போல அவர் பணம் சம்பாதிக்கவோ, சம்பாதித்ததைப் பாதுகாக்கவோ அரசியலுக்கு வர நினைக்கவில்லை. குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்கவும் அரசியலுக்கு வர ஆசைப்படவில்லை. தன்னை இந்த அளவுக்கு உயர்த்திய மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று ரஜினி ஆசைப்பட்டார்.

தனிப்பட்ட முறையில் அவரைப் பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். பாஜகவுடன் இணைந்து அரசியல் செய்ய அவர் விரும்பவில்லை. அது எனக்குத் தெரியும். தனித்துச் செயல்படவே ரஜினி ஆசைப்பட்டார். கட்டுப்பாடு வரலாம் என்று விலகினார். இந்த முறை உடல்நிலையும் அவருக்கு ஒத்துழைக்கவில்லை.

பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?

அவர் ஒரு நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர் தனித்துச் செயல்பட முடியுமா என்று தெரியவில்லை. கட்சித் தலைமை என்ன சொல்கிறதோ, அதைத்தான் அவர் செய்யவேண்டும். குறிப்பிட்டுச் சொல்லும்படி அவர்களின் செயல்பாடுகள் குறித்து எனக்குத் தெரியவில்லை.

ஆனால் மிஸ்டுகால் கொடுத்துக் கட்சியில் சேரும் கொள்கைதானே பாஜகவுடையது. அது என்ன கொள்கை என்று புரியவில்லை. யாராக இருந்தாலும் கட்சியில் சேர்ந்தால் போதும் என்று நினைக்கிறார்களா? இது எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தும். அண்ணாமலையால் தமிழ்நாட்டுக்கு, தமிழ் மொழிக்கு, இனத்துக்கு ஏதாவது நல்லது நடக்குமென்றால், அவரைக் கொண்டாடுவேன்.

பாமக ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தீர்களே. இப்போதும் பாமகவுக்குத்தான் உங்கள் ஆதரவா?

எப்போதுமே நான் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவாளன் அல்ல. பாட்டாளி மக்கள் கட்சியின் திட்டங்கள்தான் பல மாநிலங்களில் செயல்படுத்தப்படுகின்றன. தனி விவசாய பட்ஜெட், மதுவிலக்கு எனப் பல்வேறு திட்டங்கள் பாமக முன்மொழிந்தவைதான்.

பாமக தனித்து நின்றால் வெல்லமுடியுமா என்று கேட்கிறீர்கள். எந்தக் கட்சிக்குத்தான் தனித்துப் போட்டியிட்டு வெல்லும் சக்தி உண்டு? மாறி மாறிக் கூட்டணி வைப்பதாகவும் பாமக மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. திமுகவில் தொடங்கி அதிமுக, காங்கிரஸ், பாஜக, விசிக, கம்யூனிஸ்டுகள் வரை எந்தக் கட்சிதான் மாறி மாறிக் கூட்டணி வைக்கவில்லை?

இட ஒதுக்கீட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்? சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவையா?

இட ஒதுக்கீடு கட்டாயத் தேவை. சாதிவாரிக் கணக்கெடுப்பை எடுத்து அதற்கேற்ற வகையில் அனைத்து சாதிகளுக்கும் உரிய ஒதுக்கீட்டை வழங்குவதுதான் சமூக நீதி. பட்டியலினச் சாதிகளுக்குக் கணக்கெடுக்கும்போது மற்ற சாதிகள் குறித்தும் கணக்கெடுக்கலாமே? பள்ளிச் சான்றிதழ்களை வைத்தே கணக்கெடுப்பை எளிதாக முடிக்கலாமே. சாதிவாரிக் கணக்கெடுப்பைத் திட்டமிட்டு தவிர்ப்பது ஏன்..?

ஏற்கெனவே எடுக்கப்பட்ட வன்னியர்களின் மக்கள்தொகையைக் கணக்கிட்டு 14.6% இட ஒதுக்கீடு கோரப்பட்ட நிலையில், 10.5% மட்டுமே ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. போனபோக்கில் எல்லாம் இந்த இட ஒதுக்கீட்டைத் தந்துவிடவில்லை.

இவ்வளவு விரிவாகப் பேசுகிறீர்கள். அரசியலுக்கு வரலாமே?

என்னைவிட யாருக்கு அந்தத் தகுதி இருக்கிறது? ஆனால், நான் அரசியலுக்கு வரக்கூடிய சூழலா இங்கே இருக்கிறது? கொள்கையை முன்வைத்து அரசியலுக்கு வந்தவர்களின் கதை என்ன ஆனது என எல்லோருக்கும் தெரியும்.

அரசியலுக்கு வந்து வெற்றி பெற முதலில் கட்சிக்குப் பணம் தரவேண்டும், பிறகு மக்களுக்கு. இதெல்லாம் எனக்குத் தேவையா? பணம் செலவழிக்காமல் இங்கு எளிதில் வெல்ல முடியுமா? அதனால்தான் அமைதியாக இருக்கிறேன்..

அரசியல் தலைவர்கள் மீதான ஊழல், குற்றவியல் வழக்குகள் எதற்காக 20, 30 ஆண்டுகள் இழுத்தடிக்கப்படுகின்றன? சில தீர்ப்புகள் சம்பந்தப்பட்டவர்கள் இறந்த பிறகே வருகின்றன. மற்ற வழக்குகளும் இவையும் ஒன்றா? இத்தகைய வழக்குகளை அதிகபட்சம் 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். அப்போதுதான் நல்ல அரசியல் உதயமாகும்.

அதனால்தான் நாடாளுமன்றத்தில் குற்றவியல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 44% பேர் இருக்கிறார்கள். அவர்களால் எவ்வாறு நல்ல சட்டங்கள் உருவாகும்? இதெல்லாம் நடந்துவிட்டால், அரசியலுக்கு வருவீர்களா என்று நீங்கள் கேட்கும் வரை காத்திருக்க மாட்டேன். நானே வந்துவிடுவேன்’’.

இவ்வாறு இயக்குநர் தங்கர்பச்சான் தெரிவித்தார்.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x