

ஒருநாள் உலகம் பாராட்டும் மருத்துவமாக வர்மம் வெளிப்படும் என்று தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ.எம்.மூர்த்தி தெரிவித்தார்.
கோவை கலைகளின் ஆய்வு நிறுவனம், திருமூலர் வர்ம ஆராய்ச்சி சிகிச்சை மையம் மற்றும் அரி பவுண்டேஷன் நிறுவனம் இணைந்து சிறப்பு நிலை குழந்தைகளுக்கு வர்ம சிகிச்சை மற்றும் பெற்றோருக்கான இலவச வர்ம மருத்துவ சிகிச்சை முகாமை சென்னை மாதவரம் ராம்லக்ஷ்மி பேரடைஸில் நேற்று நடத்தின.
கலைகளின் ஆய்வு நிறுவன செயலர் சுரேஷ் மனோகரன், திருமூலர் வர்ம ஆராய்ச்சி சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் எஸ்.யோகநாதன், துணைத் தலைவர் டாக்டர் தெய்வப்பிரியானந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி இணை பேராசிரியரும், வர்ம ஆராய்ச்சியாளரு மான ந.சண்முகம் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளை யாட்டு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஏ.எம்.மூர்த்தி முகாமை தொடங்கி வைத்து பேசும்போது, “கலைகளின் ஆய்வு நிறுவனத்துக்கு அங்கீகாரம் அளித்து வர்மக்கலைத் துறையில் பட்டம் அளிக்க தயாராக இருக்கிறோம். இந்த துறையில் ஆராய்ச்சி செய்வதற்கு மாணவர்கள் முன்வர வேண்டும். ஒருநாள் உலகம் பாராட்டும் மருத்துவமாக வர்மம் வெளிப்படும்” என்றார்.
இந்த முகாமில் செரிபரல் பால்ஸி, ஆட்டிஸம், ஏடிஎச்டி, டவுன் சிண்ட்ரோம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட 400 சிறப்புநிலை குழந்தைகளும், அவர்களின் பெற்றோரும் பங்கேற்றனர். 19 அலோபதி டாக்டர்கள், சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி உள்ளிட்ட மருத்துவத் துறையை சேர்ந்த 48 டாக்டர்கள் கலந்து கொண்டனர். சிறப்புநிலை குழந்தைகளின் வர்ம புள்ளிகளை கண்டறிந்தனர். வர்மப் புள்ளிகளை இயக்கும் முறை குறித்து பெற்றோர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
ஆயுஷ் அமைச்சகத்தின் இணை ஆலோசகர் (சித்தா) கே.ரவி, திரைப்பட நடிகர் கார்த்தி சிவக்குமார் உள்ளிட்ட பலர் முகாமில் கலந்துகொண்டனர்.