

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுகவினரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
விழுப்புரம் அருகே நன்னாடு கிராமத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி குடும்பத்தாரின் திருமண விழாவிற்காக கடந்த 20ஆம் தேதி மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்திற்குச் செல்லும் சாலையில் திமுக கொடி கட்டப்பட்ட இரும்புக் கம்பத்தை நடும்போது, அக்கம்பம் உயர் அழுத்த மின் கம்பியில் உரசியது.
இதுகுறித்து தினேஷின் தாயார் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு போலீஸார் இயற்கைக்கு மாறான சந்தேக மரணம் (IPC 174) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, பல்வேறு தரப்பினரும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இது தொடர்பாக, விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக. 23) வெளியிட்ட அறிக்கை:
"திமுக நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதைத் தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு சில நேரங்களில் உயிரைப் பறிக்கும் சோகமும் நடந்துவிடுகிறது. விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நட முயன்றபோது மின்சாரம் தாக்கி இளம் வயதான தினேஷ் மரணம் அடைந்திருப்பது எனக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களைப் பலமுறை கண்டித்த பின்னும் இதுபோன்ற விரும்பத்தகாத, கண்டிக்கத்தக்க செயல்கள் தொடர்வது என்னை வருத்தமடைய வைக்கிறது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
திமுகவினர் என் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றுச் செயல்படுத்தக் கோருகிறேன்.
13 வயதே ஆன தினேஷை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. அவரது குடும்பத்தாரின் துயரில் பங்கேற்று, துணை நிற்கிறேன்.
இனி, இதுபோன்றவை நடக்காமல் தடுப்பதே உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்!".
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.