

தனக்கு எல்லாமுமாக நின்றவர் கருணாநிதிதான் என, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக. 23) நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. முன்னதாக, அத்துறை அமைச்சர் துரைமுருகனுக்குப் பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி, அன்பழகன் இடத்தில் துரைமுருகன் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், 'பொன்விழா நாயகன்' எனவும் துரைமுருகனைப் புகழந்து பேசினார். அப்போது, உணர்வுவயப்பட்ட துரைமுருகன் கண் கலங்கினார்.
இதையடுத்து, துரைமுருகன் பேசியதாவது:
"என் வாழ்நாளில் எத்தனையோ ஆயிரக்கணக்கான மேடைகளில் பேசியிருக்கிறேன். ஆனால், வார்த்தைகளைத் தேடி நான் அலைந்ததில்லை. பேசுவதற்கான பொருளைத் தேடியும் அலைந்ததில்லை. ஆனால், இன்றைக்கு வார்த்தையும் வரவில்லை. என்ன பேசுவதென்றும் தெரியவில்லை.
என் வாழ்க்கையில் எத்தனையோ வெற்றிகள், தோல்விகள் நிகழ்ந்திருந்தாலும், எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைப்பதைப் போல், எங்கள் தலைவர் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்து, இங்கிருக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் என்னைப் பாராட்டியதை நினைக்கும்போது, நெஞ்சம் நெகிழ்கிறது. இப்படிப்பட்ட ஒரு தீர்மானம் வரும் என்று கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கவில்லை.
முதல்வர் ஸ்டாலின் எதையும் அவசரப்பட்டுப் பேசக்கூடியவர் அல்ல. ஸ்டாலின் கொஞ்சம் அழுத்தமானவன் எனத் தலைவர் கருணாநிதி சொல்வார். ஆனால், அவர் இன்றைக்கு என் மீது காட்டியிருக்கும் பாசம், அன்பு வார்த்தைகள் அனைத்தையும் எண்ணி, கிறுகிறுத்துப் போயிருக்கிறேன்.
நான் சாதாரணமான கிராமத்தைச் சேர்ந்தவன். விவசாயி மகன். எங்கள் ஊரில் பள்ளிக்கூடம் கிடையாது. சாலை வசதி, மின்வசதி கிடையாது. நான் கல்லூரியில் படித்தபோது எனக்கு உற்ற நண்பராக 'முரசொலி' செல்வம் இருந்தார். பிறகு தலைவர் கருணாநிதி எனக்குப் பழக்கமானார். ஆனால், நான் எந்த ஊர், எந்த சாதி, என்ன பின்னணி என்று கூட அவர் கேட்டது கிடையாது.
ஒரு மாணவனாக இருக்கும்போதே என்னை நண்பனை போல் நடத்தியவர் அவர். அத்தனை ஆண்டு காலத்துக்குப் பிறகு, 1971-ல் என்னைச் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடச் சொன்னபோதுதான் என்ன சாதி எனக் கேட்டார். அந்த அளவுக்கு என் மீது தனிப் பாசம் வைத்திருந்தவர் கருணாநிதி. எனக்குத் தலைவர் அவர்தான். மணிக்கணக்கில் அமர்ந்து பேசும் நண்பரும் அவர்தான். எனக்கு எல்லாமுமாக நின்றவர் கருணாநிதிதான்.
அவரின் மறைவுக்குப் பிறகு வெற்றிடம் ஏற்பட்டது. ஆனால், ஸ்டாலின், தலைவரின் பாசத்தை மிஞ்சும் அளவுக்கு, எப்பேர்பட்ட கவுரவத்தை அளித்திருக்கிறார். எல்லாத் தலைவர்களும் பாராட்டியுள்ளீர்கள். இதற்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என எனக்குத் தெரியவில்லை.
இத்தகைய பாசத்தை அவர் என் மீது வைத்திருப்பார் என்று நினைக்கவே இல்லை. வேறு இடமாக இருந்தால் அவரைக் கட்டிப்பிடித்து அழுதிருப்பேன். நான் அதிகமாகப் பழகியவர்கள் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர். இன்றைக்கு ஸ்டாலின். பேசத் தெரியவில்லை. முதல் முறையாக எனக்குப் பேசத் தெரியவில்லை என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறேன்.
எந்த நம்பிக்கையோடு என்னை வாழ்த்தினீர்களோ, அதற்கு சேதாரமில்லாமல் மீதி வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவேன். எனக்கு வழிகாட்டி அவர்தான். என் மூச்சு இருக்கும் வரையில் இந்த இயக்கம் இருக்கும். அதுவரையில் நீங்களே என் தலைவர்".
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பேசினார்.