திமுக கொடி கட்டப்பட்ட கம்பத்தை நடும்போது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி: பின்னணி என்ன?

பிரேதப் பரிசோதனைக்குப் பின் தினேஷின் உடலைக் கண்டு கதறும் அவரின் தாயார் லட்சுமி.
பிரேதப் பரிசோதனைக்குப் பின் தினேஷின் உடலைக் கண்டு கதறும் அவரின் தாயார் லட்சுமி.
Updated on
2 min read

விழுப்புரம் அருகே திமுக கொடி கட்டப்பட்ட கம்பத்தை நடும்போது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் அருகே நன்னாடு கிராமத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி குடும்பத்தாரின் திருமண விழாவிற்காக கடந்த 20ஆம் தேதி மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்திற்குச் செல்லும் சாலையில் திமுக கொடி கட்டப்பட்ட இரும்புக் கம்பத்தை நடும்போது, அக்கம்பம் உயர் அழுத்த மின் கம்பியில் உரசியது.

அப்போது விழுப்புரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்துவந்த, கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த விழுப்புரம், ரஹீம் லே அவுட் பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் மகன் தினேஷ் (12) மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தினேஷின் தாயார் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு போலீஸார் இயற்கைக்கு மாறான சந்தேக மரணம் (IPC 174) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'தி இந்து' ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், கம்பம் நடும் பணியினை ஒருங்கிணைத்தவர் தினேஷின் குடும்பத்தாருக்கு ரூ 1.50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து 'இந்து தமிழ் திசை' சார்பில் பேசியபோது, அந்தத் திருமணத்திற்குச் செல்லவில்லை என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இதுகுறித்து விழுப்புரம் தொழிலாளர் நலத்துறை அலுவலர் சார்லஸிடம் கேட்டபோது, ”குழந்தைகளைப் பணியில் அமர்த்துவது சட்டப்படி தவறு. போலீஸார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்போது, இறந்த சிறுவனின் பள்ளி மாற்றுச் சான்றிதழை இணைக்க வேண்டும். அவர்களுக்கும் இதில் பொறுப்பு உள்ளது” என்றார்.

மேலும் இதுகுறித்துக் காவல்துறையினரிடம் கேட்டபோது, ''முதலில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர் விசாரணைக்குப் பின் குற்றப்பிரிவு மாற்றம் செய்யப்படும்” என்றனர்.

இறந்த சிறுவன் தினேஷின் தாயார் லட்சுமியைத் தொடர்பு கொண்டபோது, தான் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளர் துரையிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று முடித்துக்கொண்டார்.

துரையிடம் கேட்டபோது, ”போலீஸில் புகார் அளிக்க என் உதவியைக் கேட்டார்கள். அதற்கு உதவினேன். அந்தச் சிறுவனை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர்தான் வேலைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறுகிறார்கள். மற்றபடி வேறு எதுவும் தனக்குத் தெரியாது” என்றார்.

இறந்த பள்ளி மாணவன் தினேஷ்.
இறந்த பள்ளி மாணவன் தினேஷ்.

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியரிடம் கேட்டபோது, ”கம்பம் நடவோ, பேனர் வைக்கவோ எவ்வித அனுமதியும் கொடுக்கவில்லை. வட்டாட்சியரிடம் அறிக்கை கேட்டுள்ளேன். அறிக்கை கிடைக்கப் பெற்றபின் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

விழாக்களுக்கு பேனர் வைக்கவேண்டுமென்றால் அப்பகுதி எந்தத் துறையின் கட்டுப்பாட்டில் வருகிறதோ அவரிடம் தடையின்மைச் சான்று பெற்று, அதனுடன் அரசு நிர்ணயித்த தொகையைக் கருவூலத்தில் செலுத்தி, வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனுமதி பெறவேண்டும் என்பது விதி. ஆனால், இதனை அரசியல் கட்சியினர், பெரும்பாலான வணிக நிறுவனங்கள், தனி நபர்கள் யாரும் பின்பற்றுவதில்லை. இதனைக் கண்காணிக்க வேண்டிய துறையினரும் கண்காணிப்பதில்லை.

கரோனா தொற்று பரவத் தொடங்கி ஏறக்குறைய 15 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் அடித்தட்டு மக்களின் குழந்தைகள் கூலி வேலைகளுக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர். அவர்களுக்குக் குறைந்த ஊதியம் கொடுத்து இப்படிப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்ததாரர்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

இந்த விவகாரத்தில் பாஜக தவிர வேறு எந்த அரசியல் கட்சியோ, சமூக அமைப்போ குறைந்தபட்சம் கண்டன அறிக்கைகூட விடவில்லை. அதே நேரம் 2019 செப்டம்பர் மாதம் சென்னையில் சுபஸ்ரீ, கோவையில் ஒரு பெண் ஆகியோர் கொடிக் கம்பம், பேனர் சாய்ந்து உயிரிழந்தனர். அப்போது பெரும்பாலான கட்சிகள் கண்டன அறிக்கைகள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in