Published : 23 Aug 2021 16:13 pm

Updated : 23 Aug 2021 16:13 pm

 

Published : 23 Aug 2021 04:13 PM
Last Updated : 23 Aug 2021 04:13 PM

தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நாட்டின் உடனடித் தேவை: ராமதாஸ்

ramadoss-urges-caste-based-cencus
ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நாட்டின் உடனடித் தேவை என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆக. 23) வெளியிட்ட அறிக்கை:


"இந்தியாவில் முழுமையான சமூக நீதியை உறுதி செய்வதற்கு வசதியாக 2021-ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. பிஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில், அம்மாநில அனைத்துக் கட்சிகள் குழுவும் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து இதை வலியுறுத்தியுள்ளது.

இந்தியா கல்வி மற்றும் சமூக அடிப்படையில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட நாடு என்ற அடிப்படையில், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களை முன்னேற்றுவதற்காக இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு நிகர்நோக்கு நடவடிக்கைகள் (Affirmative Actions) மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கின்றன. அதற்கான உரிமைதாரர்களின் அளவைத் தீர்மானிப்பதற்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புதான் மிகவும் சரியான நடவடிக்கை என்ற நிலையில், அதை மேற்கொள்ளத் தாமதிப்பது நியாயமல்ல.

இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்கின்றனர். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தேவையை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களும் பல்வேறு தருணங்களில் வலியுறுத்தியுள்ளன.

ஆனால், ஆங்கிலேயர் ஆட்சியில் 1931ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பிறகு, கடந்த 90 ஆண்டுகளாக இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் போதிலும், அது இன்று வரையில் நனவாகாத கனவாகவே தொடர்வது வருத்தமளிக்கிறது.

பாமக தொடங்கப்படுவதற்கு முன், வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட 1980ஆம் ஆண்டிலிருந்து கடந்த 42 ஆண்டுகளாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நான் வலியுறுத்தி வருகிறேன். மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் பாமக அங்கம் வகித்த போதெல்லாம் இதை வலியுறுத்தியது. அதை ஏற்றுக்கொண்டு 2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்த அப்போதைய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி ஒப்புக்கொண்ட நிலையில், குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், சில அதிகாரிகள் செய்த சதி ஆகியவற்றால் அந்த வாய்ப்பு கை நழுவிப் போய்விட்டது. அது சமூக நீதிக்குப் பெரும் பின்னடைவு ஆகும்.

அதேபோல், 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்பட்ட மனுவை 2008-ம் ஆண்டில் அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் அப்போதைய மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து, 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அது சாதி, சமூக, பொருளாதாரக் கணக்கெடுப்பாக மாற்றப்பட்டு, அதன் விவரங்கள் கூட வெளியிடப்படவில்லை.

இந்தியாவில் கடந்த இரு பத்தாண்டுகளாக கைநழுவிப் போன சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை இம்முறையும் கைவிட்டு விடக் கூடாது. கரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு ஏற்கெனவே தாமதமாகி விட்ட நிலையில், அதற்கான கட்டமைப்புகளில் சாதிவாரியாக மக்கள்தொகையைக் கணக்கெடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து, அதனடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதைச் செய்வது கடினமான ஒன்றல்ல. மத்திய அரசு நினைத்தால் சாத்தியமாகும்.

மராத்தா இட ஒதுக்கீட்டு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய சாதிகளைச் சேர்ப்பதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என்று ஆணையிட்டது. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளைக் களையும் வகையில், அண்மையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மத்திய அரசு திருத்தியது. அதேபோல், சாதிவாரி மக்கள்தொகையையும் கணக்கெடுக்க வேண்டும்.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவும், எதிர்க்கட்சி வரிசைகளில் உள்ள காங்கிரஸும், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும் ஆதரிக்கின்றன. இந்த நடவடிக்கையை எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை.

எனவே, 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும். பிஹார் மாநில முதல்வரைப் போலவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் அனைத்துக் கட்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிக்கையை வலியுறுத்த வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


தவறவிடாதீர்!சாதிவாரி மக்கள்தொகைராமதாஸ்பாமகமத்திய அரசுநிதிஷ்குமார்Caste based censusRamadossPMKCentral governmentNitish kumar

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x