செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் புதுச்சேரியில் திறப்பு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் புதுச்சேரியில் திறப்பு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
Updated on
1 min read

செப்டம்பர் 1-ம் தேதி முதல், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் புதுச்சேரியில் திறக்கப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் திறப்பது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது.

இந்நிலையில் புதுவையில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர், பள்ளிக் கல்வித்துறைச் செயலர் வல்லவன், இயக்குநர் ருத்ரகவுடு, சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வர் ரங்கசாமி கூறுகையில், "கரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. தற்போது கரோனா தாக்கம் குறைந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க முடிவு எடுத்துள்ளோம்.

வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகளில் 9, 10,11, 12-ம் வகுப்புகளும், அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்படும். 9,10-ம் வகுப்புகள் ஒரு நாளும், அடுத்த நாள் 11, 12-ம் வகுப்புகளும் நடக்கும். கல்லூரிகளும் அதேபோல் சுழற்சி முறையில் நடக்கும். அதை உயர்கல்வித்துறை தெரிவிக்கும்.

கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்குத் தடுப்பூசி போட ஏற்பாடு செய்துள்ளோம். தொற்று பரவாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளி, கல்லூரிகளில் எடுப்போம். அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளில் ஆசிரியர்கள் தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டு பெரும்பாலானோர் போட்டுள்ளனர். கரோனா தடுப்பு வழிமுறைகளை அனைவரும் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகளைப் பொறுத்தவரை தமிழகத்தைப் பின்பற்றியே செயல்படுகிறோம்" என்று குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in