

உயர்ந்த உள்ளத்துக்குச் சொந்தக்காரர் துரைமுருகன் என, ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக. 23) நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. முன்னதாக, அத்துறை அமைச்சர் துரைமுருகனுக்குப் பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி, அன்பழகன் இடத்தில் துரைமுருகன் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், 'பொன்விழா நாயகன்' எனவும் துரைமுருகனைப் புகழந்து பேசினார். அப்போது, உணர்ச்சிவயப்பட்ட துரைமுருகன் கண் கலங்கினார்.
இதைத் தொடர்ந்து பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், "2001-ம் ஆண்டில் இருந்து அவரது அவை நடவடிக்கைகளை நான் கவனித்து வருகிறேன். உயர்ந்த உள்ளத்துக்குச் சொந்தக்காரர் துரைமுருகன். கருணாநிதியின் அளவில்லாப் பாசத்தையும் அன்பையும் பெற்றவர். அவர் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். அனைவரது உள்ளங்களையும் கவர்ந்த துரைமுருகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருக்கிறார். சூடாகப் பேசும் துரைமுருகன், அடுத்த நொடியே இனிமையாகப் பேசுவார்" எனத் தெரிவித்தார்.