

தமிழகத்தில் ரூ.78 கோடியே 41 லட்சத்தில் உயர்கல்வித்துறை கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த முதல்வர் ஜெயலலிதா, ரூ.124 கோடியே 39 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இது தொடர்பாக, நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 5 ஆண்டுகளில் 54 அரசு மற்றும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அந்த வகையில், காஞ்சிபுரம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தில், ரூ. 38 கோடியே 35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நிர்வாகம், கல்வியியல் துறைகள், நூலகம் மற்றும் விடுதிக் கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மேலும், ரூ.40 கோடியே 6 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் நெல்லை அண்ணா பல்கலைக்கழக மண்டல மைய விடுதி, தஞ்சை ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் விடுதி, கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி நிர்வாகம் மற்றும் துறைக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதுதவிர, கோவில்பட்டி கலை அறிவியல் கல்லூரி, புதுக்கோட்டை பெருநாவலூர் பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளில் நிர்வாகம் மற்றும் துறைக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இது தவிர, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில் வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் முப்பரிமாண அறிவியல் திரையரங்கம் கட்டப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ. 78 கோடியே 41 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், தஞ்சை மாவட்டம் ரகுநாதபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம், தருமபுரி மாவட்டம் கடத்தூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நிர்வாகம் மற்றும் கல்வியியல் பிரிவுகளுக்கு கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தேனி மாவட்டம் வீரபாண்டி, கன்னியா குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு நிர்வாகம் மற்றும் கல்வியியல் பிரிவுகளுக்கு கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. மொத்தம் ரூ.124 கோடியே 39 லட்சம் மதிப்பில் கட்டப்படும் இக்கட்டிடங்களுக்கு முதல் வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.