தனியார் சிமென்ட் ஆலைத் தொழிலாளி உயிரிழப்பு: இழப்பீடு கோரி உறவினர்கள் முற்றுகை

ஆலை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள்.
ஆலை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள்.
Updated on
1 min read

அரியலூரில் தனியார் சிமென்ட் ஆலைத் தொழிலாளி உயிரிழந்த நிலையில், இழப்பீடு கோரி உறவினர்கள் ஆலையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஆலத்தியூரில் தனியார் சிமென்ட் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்குச் சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் செந்துறை அருகேயுள்ள துளார் கிராமத்தில் உள்ளது. இந்தச் சுரங்கத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் பம்ப் ஆப்பரேட்டராக பெரியாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கல்யாணராமன் (45) மற்றும் மணக்குடையான் கிராமத்தைச் சேர்ந்த பிச்சைபிள்ளை (50) ஆகியோர் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியாற்றினர்.

இந்நிலையில், நேற்று (ஆக.22) அங்கு இருவரும் வேலை பார்த்துவிட்டு மதியம் சாப்பிட்டுள்ளனர். அப்போது, கல்யாணராமன் அமர்ந்திருந்தபடியே மயக்கம் அடைந்தார். உடன் அருகிலிருந்த பிச்சைப்பிள்ளை அங்கிருந்தவர்களின் உதவியுடன் மணக்குடையான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது செல்லும் வழியிலேயே கல்யாணராமன் இறந்துவிட்டதாகவும், இறந்தவரின் பிரேதம் திட்டக்குடி அரசு மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கல்யாணராமனின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பெரியாக்குறிச்சி பொதுமக்கள் ஆகியோர், "கல்யாணராமன் இறப்பில் சந்தேகம் உள்ளது. இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்" எனக் கூறி, சிமென்ட் ஆலை வாயில் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் இன்று (ஆக. 23) ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களிடம் அரியலூர் டிஎஸ்பி மதன் மற்றும் தளவாய் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும், கிராமத்தின் முக்கிய நபர்களை ஆலை நிர்வாகம் உள்ளே அழைத்துப் பேசிவரும் நிலையில், பொதுமக்கள் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்புகளைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in