

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக 125 நாட்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டன. பூங்கா ஊழியர்கள் சுற்றுலாப் பயணிகளுக்குப் பூக்கள் கொடுத்து வரவேற்றனர்.
கடந்த ஆண்டு நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தலால் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 6 மாதங்களாக மூடப்பட்டன. பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், கரோனா இரண்டாம் அலை காரணமாக, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ம் தேதி முதல் மீண்டும் பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்ததை அடுத்து, கடந்த இரண்டு மாதங்களாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், சுற்றுலாத் தலங்களைத் திறக்க அரசு அனுமதிக்கவில்லை.
மிகவும் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறைக்குத் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என அதைச் சார்ந்தவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில், இன்று (ஆக. 23) முதல் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களைத் திறக்க அரசு அனுமதித்தது.
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்காக்கள், கோத்தகிரி நேரு பூங்கா, சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், நீர்வீழ்ச்சி மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்பட்டன.
தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தப்படுத்தியும், தெர்மல் ஸ்கேனர் கொண்டு வெப்பநிலை சரிபார்க்கப்பட்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முதல் நாளான இன்று பூங்கா திறக்கப்படும் முன்னரே பூங்காவைக் காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.
உதகை தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டதும், பூங்காவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளை ஊழியர்கள் பூக்களைக் கொடுத்து வரவேற்றனர்.
தோட்டக்கலைத்துறையினர் கூறும்போது, "பூங்கா 125 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து, தயாராக இருந்தோம். பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவிப்புப் பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. நுழைவுக் கட்டணம் வாங்கும் இடத்தில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வட்டங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும், கூட்டம் அதிகரிக்காத வண்ணம் பூங்காவுக்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள் பூங்காவைக் கண்டு ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றனர்.
கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை வெயிலின் தாக்கம் இருந்தது.
சுற்றுலாப் பயணிகள் கூறும்போது, "உதகையில் காலநிலை ரம்மியமாக இருந்தது. அதை வெகுவாக அனுபவித்தோம். உதகைக்கு வர அனுமதிக்கப்பட்டபோதும், சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டிருந்ததால், ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம். இன்று முதல் சுற்றுலாத் தலங்களைக் காண அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவற்றைக் காண ஆவலாக உள்ளது" என்றனர்.