

சென்னை மாநகராட்சி சார்பில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு வீட்டுக்கே சென்று கரோனா தடுப்பூசி போடும் பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபுஆகியோர் நேற்று தொடங்கிவைத்தனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு, அவர்களது வீடுகளுக்கே சென்றுகரோனா தடுப்பூசி போட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், சென்னை தினத்தை முன்னிட்டு, ரிப்பன் மாளிகையில் இந்த சேவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
முதியோர்களின் வீடுகளுக்கு தடுப்பூசி போடும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் செல்லும் 15 வாகனங்களின் சேவையை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்கே.என்.நேரு, அறநிலையத் துறைஅமைச்சர் சேகர்பாபு ஆகியோர்கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் நேரு கூறியதாவது:
தொலைபேசியில் முன்பதிவு
80 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி போட விரும்பினால், 044 - 25384520, 46122300 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு, முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இதன்பிறகு, அவர்களது இருப்பிடத்துக்கே சென்று தடுப்பூசி போடப்படும்.
சென்னையில் தற்போது 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 1.66 லட்சம் பேர் உள்ளனர். இதுவரை இவர்களில் சுமார் 90 ஆயிரம்பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மற்ற 76 ஆயிரம் பேருக்கு, அவர்களது வீடுகளுக்கே சென்று, தடுப்பூசி போடப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.