

வண்டலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாநாட்டை வரும் 27-ம் தேதி நடத்த அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள விஜிபி மைதானத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நாளை மறுநாள் (14-ம் தேதி) மாநில மாநாடு நடைபெறும் என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இதையடுத்து, பாமக சார்பில் மாநாட்டிற்கு அனுமதிகோரி அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தார். கடந்த ஜனவரி 8-ம் தேதி வண்டலூர் போலீஸ் டிஎஸ்பி மாநாட்டுக்கு அனுமதி வழங்க மறுத்து விட்டார்.
இதை எதிர்த்து திருக்கச்சூர் ஆறுமுகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வருவாய் துறையிடம் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் வண்டலூர் டிஎஸ்பியும் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் மாநாடு நடத்த அனுமதி அளிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், ‛மாநாடு நடைபெறும் இடம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதற்காக அந்த இடத்தில் அனுமதி வழங்க மறுப்பது ஏற்புடையது அல்ல. எனவே மனுதாரர் குறிப்பிட்ட இடத்தில் அவர்கள் கட்சி மாநாடு நடத்த அனுமதி அளிக்க வேண்டும்’ என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் பாமக மாநில மாநாட்டிற்கு அனுமதி அளித்து பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி செங்கல்பட்டு ஆர்டிஓ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சம்மந்தப்பட்ட நிலம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த மனுவில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. எனவே தனி நீதிபதி உத்தரவிற்கு தடைவிதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், வேணுகோபால் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல். சோமையாஜி ஆஜராகி வாதிட்டார். ‛அந்த நிலம் அரசுக்குத்தான் சொந்தமானதாக உள்ளது. வி.ஜி.பி. நிறுவனம் அதன் விற்பனை ஒப்பந்ததாரர்தான். எனவே அவர்களுக்கு அங்கு மாநாடு நடத்த அனுமதி வழங்கும் உரிமை கிடையாது’ என்று குறிப்பிட்டார். அப்போது விஜிபி சார்பில் ஆஜாரன வழக்கறிஞர், ‛ஏற்கனவே நாங்கள் கொடுத்த அனுமதியை திரும்ப பெற்றுள்ளோம் அனுமதி அளித்து தொடர்பாக நிபந்தனை அற்ற மன்னிப்பு கோருவாதாக’ தெரிவித்தார்.
பாமக சார்பில் ஆஜாரன மூத்த வழக்கறிஞர் ‛மாநாடு நடத்த குறுகிய காலம் மட்டுமே உள்ளது. இதுவரை பல லட்சம் செலவு செய்து மாநாட்டு ஏற்படுகளை செய்து விட்டோம். இந்நிலையில் மாநாடு பாதிக்கபட்டால் இழப்பு ஏற்படும். நாங்கள் நிலத்தின் உரிமை கோரவில்லை. ஒரு நாள் மட்டுமே அந்த இடத்தை பயன்படுத்தி கொள்ள அனுமதி கோருகின்றேம்’ என வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‛பாமக சார்பில் வண்டலூரில் மாநாடு நடத்த இந்த நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது. அனுமதி மறுத்து வண்டலூர் டிஎஸ்பி உத்தரவு ரத்து செய்யபடுகிறது. ஆனால் மாநாடு நடத்த 25 லட்சம் உரிம கட்டணமாக பாமக சார்பில் செலுத்த வேண்டும். இதனை 13-ம் தேதி (இன்று) உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள இந்தியன் வங்கியில் செலுத்தி அதற்கான வங்கி டிடியை நீதிமன்ற பதிவாளர் ஜெனரலிடம் 12 மணிக்குள் அளிக்க வேண்டும். இதன் நகலை வண்டலூர் டிஎஸ்பியிடம் அளித்த பின்னர் அவர் அனுமதி வழங்க வேண்டும். பாமக மாநாடு நடத்த அனுமதி கடிதம் அளித்த விஜிபி நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதனை மூன்று நாட்களில் செலுத்த வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே இன்று மாலை நீதிபதிகளிடம் பாமக சார்பில் திருக்கச்சூர் ஆறுமுகம் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ஒரு நாளைக்குள் மாநாட்டுப் பணிகளை செய்து முடிக்க முடியாது. காஞ்சீபுரம் பகுதியில் 20, 21-ம் தேதிகளில் திமுக, தேமுதிக கட்சிகளின் பொதுக்கூட்டம் நடக்கிறது. எனவே வரும் 27-ம் தேதியன்று இந்த மாநாட்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.
மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‛மாநாட்டுப் பந்தல் போன்றவை கூடுதல் நாட்கள் அங்கு வைக்கப்பட உள்ளன. எனவே ரூ.25 லட்சம் டெபாசிட் தொகையை ரூ.35 லட்சமாக உயர்த்துகிறோம். அதை 15-ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குள் செலுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.