Published : 23 Aug 2021 03:12 AM
Last Updated : 23 Aug 2021 03:12 AM

ஊரடங்கின் புதிய தளர்வுகள் இன்று முதல் அமல்- திரையரங்குகள், கடற்கரை திறப்பு: ஆந்திரா, கர்நாடகாவுக்கு 1,000 பேருந்துகள் இயக்கம்

தமிழகத்தில் ஊரடங்கில் அளிக்கப்பட்டுள்ள புதிய தளர்வுகள் இன்றுமுதல் (ஆக.23) அமலுக்கு வருகின்றன. அதன்படி, திரையரங்குகள், கடற்கரைகள் திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகாவுக்கு 1,000 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆக.9-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று காலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூடுதல் தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 9, 10, 11, 12-ம் வகுப்புகளுக்காக பள்ளிகளையும், கல்லூரிகளையும், செப்.1-ம் தேதிமுதல் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல 50 சதவீதபார்வையாளர்களுடன் திரையரங்குகளையும், கடற்கரைகள், உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவற்றையும் இன்றுமுதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான கடைகளும், 10 மணிவரை செயல்படலாம். தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.

மழலையர் காப்பகங்களை திறக்கவும், விளையாட்டு பயிற்சிக்காக மட்டும் நீச்சல் குளங்களைதிறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள், கேளிக்கைவிடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் இன்று முதல் செயல்படலாம்.

பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிர்க்க வார இறுதிநாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டுக்கு தலங்களிலும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை தொடர்கிறதா என்பதற்கான தகவல்கள் ஏதும்முதல்வரின் அறிவிப்பில் இடம்பெறவில்லை.

பேருந்துகள் இயக்கம்

இதுதவிர, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கரோனா தொற்று அதிகம் இருப்பதால் அந்த மாநிலத்துக்கான பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ஆந்திரா, கர்நாடகாவுக்கு 1,000அரசுப் பேருந்துகளை இயக்க உள்ளோம். தேவைக்கு ஏற்றார்போல், பேருந்துகள் படிப்படியாக அதிகரித்து இயக்கப்படும். திருப்பதி, மைசூரு, பெங்களூரு, சித்தூர்,நெல்லூர், காளஹஸ்தி உட்பட பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னையில் இருந்து மட்டும் 200 பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x