Published : 23 Aug 2021 03:13 AM
Last Updated : 23 Aug 2021 03:13 AM

குமரியில் இருந்து டெல்லிக்கு 2,850 கி.மீ. மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சைக்கிள் பேரணி: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பயணம்

கன்னியாகுமரியில் இருந்து டெல்லி ராஜ்காட்டுக்கு செல்லும் மத்திய பாதுகாப்புப் படை வீரர்களின் சைக்கிள் பேரணியை கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடற்கரையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்

இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை நினைவுகூரும் வகையில் ‘ஆசாதி கா அம்ருத் மகா உத்ஸவ்’ என்ற தலைப்பில் மத்திய பாதுகாப்புப் படை (சி.ஆர்.பி.எப்) சார்பில் 15 வீரர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி நேற்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்டது.

சைக்கிள் பேரணியை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அவர் பேசும்போது, ‘இந்தியாவின் சகோதரத்துவம், சமூக நீதி, மதச்சார்பின்மை உள்ளிட்ட கோட்பாடுகளை நாம் பேணி காத்து இந்திய துணைக்கண்டத்தை தலை நிமிரச் செய்ய வேண்டும் என்ற உணர்வை நமக்கு உருவாக்கும் வகையில் இந்த சைக்கிள் பேரணி அமையும். இதில் பங்கேற்றுள்ள வீரர்களை பாராட்டுவதுடன் அவர்களது பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்’’ என்றார்.

மத்திய பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து மரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி., சிஆர்பிஎப் இயக்குநர் ரேஷ்மி சுக்லா, கேரள தீயணைப்புத்துறை இயக்குநர் சந்தியா, குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், எஸ்.பி. பத்ரிநாராயணன், பிரின்ஸ் எம்எல்ஏ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவர்கள் வாழ்ந்த திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக சைக்கிள் பேரணி கர்நாடகா செல்கிறது. அங்கிருந்து ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் வழியாக 2,850 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து 15 வீரர்களும் காந்தி ஜெயந்தி தினமான அக்.2-ம் தேதி டெல்லி ராஜ்காட்டை சென்றடைகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x