

கோயில்களில் அதிக கூட்டம் கூடியதால்தான் கரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கிறது என ஆய்வில் தெரிய வந்ததால், பக்தர்கள் வழிபடத் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் காணல் அறக்கட்டளை சார்பில் ரூ.50 லட்சத்தில் நிறுவப்பட்ட 6,000 லிட்டர் திரவ ஆக்சிஜன் சேமிப்பு கொள்கலனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். தொடர்ந்து சிவகங்கை அருகே மதகுபட்டியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று மருந்துகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்காக மத்திய அரசிடம் ரூ.99.84 கோடி செலுத்தி 29.22 லட்சம் கரோனா தடுப்பூசிகளை தமிழக அரசு வாங்கியது. மேலும் மத்திய அரசு 2 கோடியே 69 லட்சத்து 91 ஆயிரத்து 100 தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. இதுவரை 2 கோடியே 80 லட்சத்து 57 ஆயிரத்து 397 தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 12 கோடி தடுப்பூசிகள் தேவை. கையிருப்பில் 15 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன.
தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகம் இருந்த மாவட்டங்களில் மருத்துவத் துறை நடத்திய ஆய்வில், கோயில்களில் அதிகம் கூட்டம் கூடியதால் தான் தொற்று அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. அதனால் கோயில்களில் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை என்றார்.
ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, எம்எல்ஏக்கள் மாங்குடி, தமிழரசி ஆகியோர் உடன் இருந்தனர்.