

கொரட்டூர் ஏரியில் கழிவுநீரை விட்டு மாசுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு துறைகளுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கொரட்டூர் ஏரியில் கழிவுநீரை விட்டு மாசுபடுத்துவதாகவும், அந்த ஏரி ஆக்கிரமிப்பில் சிக்கி இருப்பதாகவும் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கூட்டுக்குழுவும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
கொரட்டூர் ஏரியிலிருந்து 8 டன் கழிவுகள் அகற்றப்பட்டதாக கடந்த மாதம்கூட நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. இதன்மூலம் அந்த ஏரியில் விதிகளை மீறி குப்பைகள் கொட்டப்படுவது தொடர்வதும், நீர்நிலை மாசுபட்டிருப்பதும் உறுதியாகியுள்ளது. ஆனால் அரசு துறைகள் தாக்கல் செய்யும் அறிக்கைகளில், ஏரியில் குப்பை கொட்டும் நிகழ்வு ஏதும் நடைபெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் விதிகளை மீறுவோர் மீதும், அதற்கு பயன்படுத்தப்படும் வாகனம் மற்றும் வாகனத்தின் உரிமையாளர் ஆகியோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி சென்னை மாவட்ட ஆட்சியர், காவல்துறையுடன் இணைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். சென்னை மாநகராட்சியும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், விதிகளை மீறி ஏரியை மாசுபடுத்தும் தொழிற்சாலையை கண்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அது தொடர்பான விரிவான தனி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 16-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.