

செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 9,962 கர்ப்பிணிகளுக்கும், 9,812 பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கரோனா பரவல் குறைந்தாலும் 3-வது அலைக்கான வாய்ப்பு உள்ளதாக கருதப்படுவதால், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசு தயாராகி வருகிறது.
குழந்தைகளுக்கு பாதிப்பு பெரிதும் இருக்காது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை கவனிப்பதற்கென பிரத்யேக வார்டுகளை அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
முன்களப் பணியாளர்கள் தொடங்கி 18 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அண்மையில் மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சகம், கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 17 ஆயிரத்து 539 கர்ப்பிணிகள் உள்ளனர். இவர்களில் 9,962 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
இதேபோல் பாலுாட்டும் தாய்மார்கள் 15 ஆயிரத்து 255 பேர் உள்ளனர். இதில் 9,812 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.