

கோடநாடு வழக்கு முடிந்து போனதல்ல. அதன் மூலம் யாரையும் அச்சுறுத்தி, மிரட்டவில்லை என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இன்று (ஆக.22) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
''தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் கரோனா தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து செப்டம்பர் 1-ம் தேதி முதல் 50 சதவீத மாணவர்களோடு வகுப்புகள் தொடங்கும்.
நீதிமன்றம் காட்டியுள்ள வழிமுறைகளைக் கடைப்பிடித்து ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்குரிய சட்டத் திருத்தம் தற்போதைய சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப்படும்.
தங்களை விடுதலை செய்து, இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என திருச்சி மத்தியச் சிறையில் உள்ள இலங்கை அகதிகள், அண்மையில் தற்கொலை முயற்சி செய்துள்ளனர். அவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.
கோடநாடு வழக்கு முடிந்து போனதல்ல. சாட்சிகளிடம் விசாரணை செய்வதற்கான உரிமை அரசுக்கு உண்டு. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுக்க விரும்பினால் கொடுக்கலாம். யாரையும் அச்சுறுத்தவதற்கோ, மிரட்டுவதற்கோ கோடநாடு வழக்கை ஆயுதமாகப் பயன்படுத்தவில்லை.
அதே நேரத்தில், கோடநாடு சம்பவத்தில் தொடர்புடைய பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நடந்தது என்ன என்பதைத் தெளிவுபடுத்துவோம் என்று திமுக தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியதைச் செய்கிறபோது கோபப்படுவதில் நியாயம் இல்லை. இது, பழிவாங்கும் போக்கு என்று கூறுவது ஏற்புடையதல்ல''.
இவ்வாறு அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.