

மணிப்பூர் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
பாஜக மூத்த தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசனை மணிப்பூர் ஆளுநராக நியமித்து இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாகத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''மணிப்பூர் மக்களுக்கு சேவையாற்ற உள்ள எல்.கணேசனுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மணிப்பூரில் அவருக்கு அமைதியான மற்றும் வெற்றிகரமான பணிக்காலம் அமைய வாழ்த்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ''மணிப்பூர் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அன்பைப் பெற்ற பண்பாளரும், நீண்ட அரசியல் அனுபவத்துக்குச் சொந்தக்காரருமான இல.கணேசனுக்கு வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார். மேலும், இல.கணேசனைத் தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு தமிழக முதல்வர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதேபோல தமிழக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் இல.கணேசனின் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், ''மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜகவின் மூத்த தலைவரும் நான் பெரிதும் போற்றுபவருமான இல.கணேசனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.