

நாமக்கல்லில் அமையும் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.காளியண்ணனின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கார்த்திகேய சிவசேனாபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
’’மறைந்த டி.எம்.காளியண்ணன், சட்டமேதை அம்பேத்கரின் தலைமையிலான இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்தவர், நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாட்டில் 3 முறை சட்டப்பேரவை உறுப்பினர், சட்ட மேலவை உறுப்பினர், சேலம் ஜில்லா போர்டு தலைவர் (1954-57), இந்தியன் வங்கி இயக்குநர், திருச்சி பெல் நிறுவனத்தின் இயக்குநர், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர் போன்ற பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தவர். மேலும், மகாத்மா காந்தி, பண்டிட் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து மக்கள் பணியாற்றியவர்.
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் 1954-ல் ஓராசிரியர் உள்ள 2000-க்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்தவர். கொங்கு மண்டலத்தில் பல நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு முன்னோடியாக இருந்தவர். மோகனூர் சேலம் கூட்டுறவுச் சர்க்கரை ஆலை, சேஷசாயி பேப்பர் மில்ஸ், சங்ககிரி இந்தியா சிமெண்ட்ஸ் ஆகியவற்றை நிறுவக் காரணமாய் இருந்து இந்தப் பகுதியின் தொழில் புரட்சிக்கு வித்திட்டவர். ஜமீன் ஒழிப்பை ஆதரித்து ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வழங்கி, தன்னலமில்லா வாழ்வு வாழ்ந்தவர். டி.எம்.காளியண்ணன் தனது 101-வது வயதில் 28.05.2021 அன்று காலமானார்.
தேசத்திற்கான அவரது தன்னலமற்ற தியாகத்தை அங்கீகரிக்கும் விதமாக நாமக்கல் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனைக்கு டி.எம்.காளியண்ணனின் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் முன்வைத்தோம்.
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, டி.எம்.காளியண்ணனின் பேரனும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவருமான செந்தில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் தேவராஜன், கொங்குநாட்டு வெள்ளாளர் சங்கத் தலைவர் வெங்கடாசலம், மாவட்டக் கழக இலக்கிய அணிச் செயலாளர் பழனிசாமி ஆகியோர் இணைந்து முதல்வரிடம் இக்கோரிக்கையை தெரிவித்தோம். "
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.