

தமிழகம் முழுவதும் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களின் தன்மை குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளதை அடுத்து, மாநில உளவுத் துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பு கே.பி.பூங்கா அருகே அடுக்குமாடி குடியிருப்பு கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. தற்போது, குடியிருப்பில் சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் அங்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர், இந்தக் கட்டிடங்களின் ஸ்திரத் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சென்னை ஐஐடி நிபுணர் குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து, இவ்விவகாரத்தில் குடிசை மாற்றுவாரிய அதிகாரிகள் 2 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல, பெரம்பலூர் மாவட்டம் கவுள்பாளையத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளும் தரமற்று கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ப.வெங்கட பிரியாஆய்வு செய்து, கட்டிடங்களில் உள்ள குறைபாடுகளை சீரமைத்த பிறகே, ஒப்பந்ததாரருக்கு நிலுவைத்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், கடந்த அதிமுகஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களின் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என மாநில உளவுத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களின் தன்மை குறித்து ஆய்வு செய்யும் பணியில் உளவுத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து உளவுத் துறைபோலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் தரமில்லை என புகார்கள் வருவதால், ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனைகட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன? பழைய கட்டிடங்கள் என்றால்அது எந்த வகையில் சீரமைக்கப்பட்டுள்ளது? எந்தெந்த துறையின்கீழ், எவ்வளவு மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன?
அந்தக் கட்டிடங்களை கட்டியஒப்பந்ததாரர் யார்? அவரது பின்னணி என்ன? அந்தக் கட்டிடங்கள் எந்த அளவுக்கு பொதுமக்களுக்கு பயன் தருகிறது? தற்போது அந்தக் கட்டிடங்களின் உறுதி தன்மை எப்படி உள்ளது என்பன போன்ற விவரங்களை சேகரித்து வருகிறோம். இதுதொடர்பான அனைத்து ஆய்வுகளையும் செய்து, அதுகுறித்த அறிக்கை அரசிடம் அளிக்கப்படும்’’ என்றார்.