Published : 22 Aug 2021 03:12 AM
Last Updated : 22 Aug 2021 03:12 AM

தமிழகத்தில் பதவிகளை பிடிக்க கடும் போட்டி- பாஜக நிர்வாகிகளை மாற்ற அண்ணாமலை தீவிர ஆலோசனை

சென்னை

தமிழக பாஜக நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான பணிகளில் அக்கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

விருப்ப ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே.அண்ணாமலை, தமிழக பாஜக தலைவராக கடந்தஜூலை 8-ம் தேதி நியமிக்கப்பட்டார். பாஜக கட்சி விதிகளின்படி, மாநிலத் தலைவராக ஒருவர்நியமிக்கப்பட்டால் பொதுச் செயலாளர்கள், துணைத் தலைவர்கள், பொருளாளர், செயலாளர்கள், அலுவலகச் செயலாளர் போன்ற மாநில நிர்வாகிகளை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

பாஜக மாநிலத் தலைவர் பதவி என்பது 3 ஆண்டுகளைக் கொண்டது. அண்ணாமலை இடையில் மாநிலத் தலைவராகி இருப்பதால் நிர்வாகிகளை முழுமையாக மாற்றாமல் 50 சதவீதம் அளவுக்கு மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

புதியவர்களை நியமிக்க திட்டம்

பாஜகவை பொருத்தவரை மாநில பொதுச் செயலாளர் பதவி என்பது மிக முக்கியமானது. அவர்கள் அனைவரும் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட மாநில மையக் குழுவில் இடம்பெறுவர். தற்போது கரு.நாகராஜன், கே.டி.ராகவன், ஜி.கே.செல்வக்குமார், ஆர்.சீனிவாசன் ஆகியோர் அந்தப் பதவியில் உள்ளனர். இவர்களில் இருவரை மாநில துணைத் தலைவர்களாக நியமித்துவிட்டு, புதியவர்களை மாநில பொதுச் செயலாளர்களாக நியமிக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதுபோல எம்.சக்கரவர்த்தி, நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, கருப்பு முருகானந்தம்,எம்.என்.ராஜா, புரட்சி கவிதாசன், பி.கனகசபாபதி, ஏ.ஆர்.மகாலட்சுமி ஆகியோர் மாநில துணைத் தலைவர்களாகவும், டால்பின் தரன், கே.சண்முகராஜ், டி.வரதராஜன், ஏ.பாஸ்கர், ஆர்.உமாரதி, டி.மலர்க்கொடி, பி.கார்த்தியாயினி, பார்வதி நடராஜன், சுமதி வெங்கடேஷ் ஆகியோர் மாநிலச் செயலாளர்களாக உள்ளனர்.

தலைவர்களுடன் ஆலோசனை

இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை மாற்றிவிட்டு புதியவர்களை நியமிக்க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அமைப்புபொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான சி.டி.ரவி, மாநில அமைப்புபொதுச் செயலாளர் கேசவ விநாயகம், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோருடன் அண்ணாமலை ஆலோசனை நடத்தி வருவதாக பாஜக நிர்வாகி ஒருவர் ‘இந்து தமிழ் திசை' நாளிதழிடம் தெரிவித்தார்.

மத்தியில் பாஜக ஆட்சியில்இருப்பதால் மாநில பொதுச் செயலாளர், துணைத் தலைவர், செயலாளர் போன்ற பதவிகளுக்கு அக்கட்சிக்குள் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள், பெண்கள், பட்டியலின, பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக வாய்ப்பு அளிக்கும் வகையில் மாநில நிர்வாகிகள் நியமனம் இருக்கும் என்று பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x