

தூத்துக்குடி தாது மணல் கடத்தல் விவகாரத்தில் லாரி ஓட்டுநர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 39 டன் தாது மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி, தெற்கு வீரபாண்டியபுரத்தில் வி.வி. டைட்டானியம் பிக்மெண்ட் என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்துக்கு லாரியில் இல்மனைட் தாது மணல் நேற்று முன்தினம் இரவு கொண்டுவரப்பட்டது.
இதுகுறித்த தகவலின்பேரில், வருவாய்த் துறையினர் அங்கு சென்றபோது, அந்நிறுவனம் முன்பு 9 டன் இல்மனைட் தாது மணலுடன் ஒரு லாரி நின்றுகொண்டிருந்தது. விஏஓ அளித்த புகாரின்பேரில், சிப்காட் போலீஸார் தூத்துக்குடி வி.வி. டைட்டானியம் கம்பெனியில் சோதனை நடத்தியபோது, அங்கு மேலும் 4 லாரிகளில் தாதுமணல் வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், எஸ்பி ஜெயக்குமார், மதுரை கனிம வள துணை இயக்குநர் சட்டநாதன் சங்கர் உள்ளிட்டோர், அந்நிறுவனத்தில் விசாரணை நடத்தினர். கடந்த 2013-ம் ஆண்டு தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு பகுதிகளில் சீல் வைக்கப்பட்ட குடோன்களில் இருந்து தாது மணல் எடுத்து வரப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகித்தனர். எனவே, அந்த குடோன்களிலும் ஆய்வு நடத்தப்பட்டது.
தொடர்ந்து, லாரி ஓட்டுநர்களான தூத்துக்குடி செக்கடி தெருவைச் சேர்ந்த இசக்கி (49), ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து (39), ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த முருகன்(39), சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த சடையாண்டி(39), ஆத்தூர் பரதர் தெருவைச் சேர்ந்த செல்வம் (59) மற்றும் வி.வி. டைட்டானியம் பிக்மெண்ட் நிறுவனத்தின் முள்ளக்காடு குடோன் மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் (41) ஆகிய 6 பேரைசிப்காட் போலீஸார் கைது செய்தனர். 5 லாரிகள் மற்றும் 39 டன் இல்மனைட் தாது மணல் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.