

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கோழி திருடிய வழக்கில் தலைமைக் காவலர் உட்பட 2 போலீஸார் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
விளாத்திகுளம் அருகே உள்ள காடல்குடியைச் சேர்ந்தவர் முத்துச்செல்வன்(33). இவர், காடல்குடி காவல் நிலையம் அருகே கோழிஇறைச்சி கடை நடத்தி வருகிறார்.கடந்த 16-ம் தேதி இரவு முத்துச்செல்வனின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அவர் தூங்கிக் கொண்டிருந்ததால், அவரது மனைவி ஜெயா எடுத்து பேசியுள்ளார். எதிர்முனையில் பேசியவர், “காடல்குடி காவல் நிலையத்தில் இருந்து பேசுகிறோம், உடனடியாக ஒரு கிலோ கோழி இறைச்சி கொண்டு வரவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு “இப்போது முடியாது, காலையில் வந்து தருகிறோம்” எனக் கூறிவிட்டு இணைப்பை ஜெயா துண்டித்துள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த காடல்குடி காவல் நிலைய தலைமைக்காவலர் பாலகிருஷ்ணன், காவலர்கள் சதீஷ்குமார், பாலமுருகன் ஆகியோர் அன்று நள்ளிரவில் கோழிக்கடை பூட்டை உடைத்துகறிக் கோழியைத் திருடிச்சென்றுள்ளனர். இவ்விவகாரம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்குதெரியவந்தது. தலைமைக்காவலர் பாலகிருஷ்ணன் உட்பட 3 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றிஎஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
இதனால், மேலும் ஆத்திரம் அடைந்த தலைமைக் காவலர் பாலகிருஷ்ணன், காவலர் சதீஷ்குமார் ஆகியோர், கடந்த 18-ம்தேதி கோழிக் கடைக்கு சென்று,முத்துச்செல்வனைத் தாக்கினர். காயமடைந்த முத்துச்செல்வன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதையடுத்துகாடல்குடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
முத்துச்செல்வன் அளித்த புகாரின்பேரில் தலைமைக் காவலர் பாலகிருஷ்ணன், காவலர்கள் சதீஷ்குமார், பாலமுருகன் ஆகிய 3பேர் மீது 5 பிரிவுகளில் காடல்குடிகாவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.தலைமைக்காவலர் பாலகிருஷ்ணன், காவலர்சதீஷ்குமார் ஆகியோரை தற்காலிகபணி நீக்கம் செய்து எஸ்பி ஜெயக்குமார், உத்தரவிட்டார். காவலர்கள் 3 பேர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.