

கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட 7 வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் ஆஜராகவும், தொழில் செய்யவும் தமிழ்நாடு பார் கவுன்சில் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை கோட்டூர் நாயுடு தெரு 4-வது சந்தில் சிமென்ட் சாலை போட்டால், தன் வீட்டுக்குள் மழைநீர் புகுந்துவிடும் என்று கூறி, அதற்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பத்மநாபன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, தாமஸ் தனசீலன் என்பவர் கடந்த பிப்ரவரியில் பத்மநாபனுக்கு எதிராக கோட்டூர்புரம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இரு தரப்பும் சமாதானமாக செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், சிமென்ட் சாலை அமைப்பது தொடர்பாக அவர்கள் இடையே கடந்த 17-ம் தேதி மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் கோட்டூர்புரம் காவல் நிலையத்துக்குள் மோதலில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இந்த சிசிடிவி பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் பத்மநாபனின் மனைவி செல்லம்மாள் கொடுத்த புகாரின் பேரில்,வழக்கறிஞர்கள் ஏஞ்சல்ஸ், மணிகண்டன் உள்ளிட்டோர் மீதும், வழக்கறிஞர் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில், வழக்கறிஞர் பத்மநாபன் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் இதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சிலிலும் புகார் கொடுத்திருந்தார். அதன்பேரில், பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் தலைமையில் அவசர கூட்டம்நடத்தப்பட்டது. இதில், வழக்கறிஞர்கள் ஜெ.பாலமுருகன், எம்.ஏஞ்சல்ஸ், பி.மணிகண்டன், டி.பத்மநாபன், ஆர்.ஹரிஹரன், வி.நெப்போலியன், எஸ்.ராஜேஸ்வரன் ஆகிய 7 பேர் மீதான ஒழுங்குநடவடிக்கை விசாரணை முடியும்வரை, இந்த 7 பேரும் நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் ஆஜராகவும், வழக்கறிஞராக தொழில் செய்யவும் இடைக்கால தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், செயலாளர் சி.ராஜாகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.